ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் தங்கியுள்ள காலப்பகுதியில் ஜப்பான் நாட்டின் முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி நாளை  பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், எதிர்வரும் 14 ஆம் திகதி உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக ஜப்பான் பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்காக இராப்போசன விருந்தொன்றினையும் வழங்கவுள்ளார்.

சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை மேம்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான யென் கடன் உடன்படிக்கையொன்று இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜப்பான் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் டோக்கியோ வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இணை அனுசரணை வழங்கப்படவுள்ள ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜப்பானிலுள்ள இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.