இந்திய இராணுவத்தில் உளவாளியை ஏற்படுத்துமாறு ஐ.எஸ் அமைப்பின் தலைவர் மேஜர் இக்பால் தன்னிடம் கூறியதாக மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹேட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹேட்லி, அமெரிக்க சிறையில் இருந்தவாறு, தொடர்ந்து 5 நாட்களாக 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக வாக்குமூலம் அளித்து வருகிறார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹேட்லி நேற்று அளித்த வாக்குமூலத்தில்,

இந்திய இராணுவத்தின் தென்பகுதி தலைமையகமான புனேவுக்குச் சென்று பார்வையிடுமாறு கூறினார்.

மேலும், இந்திய இராணுவத்தில் இருந்து கொண்டு நமக்குத் தகவல்களை அளிக்கும் வகையில் ஒரு உளவாளியை ஏற்படுத்துமாறும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் மேஜர் இக்பால் வலியுறுத்தினார்.

அதேபோல், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் யாரையாவது உளவாளியாக மாற்றி, அங்கிருந்து முக்கியத் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் இக்பால் வலியுறுத்தினார்.

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் மற்றும் சிவசேனா பவனில் தான் ஆய்வு செய்ததாகவும், ஆனால், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பினரை, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருப்பதால் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் ஹேட்லி கூறியுள்ளார்.

அத்தோடு, லஷ்கர்-இ-தய்பா அமைப்பின் தளபதி ஹபீஸ் சயீத்தையும், செயல் தளபதி ஸாகிர் ரஹ்மானையும் சந்தித்ததை ஹேட்லி ஒப்புக் கொண்டுள்ளார்.