சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இடையில்  பிற்பகல் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஸ்ரபதி பவனில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சூழலை பாதுகாப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ள இந்திய ஜனாதிபதி, இலங்கை தற்போது சூரியசக்தி துறைக்குள் பிரவேசித்திருப்பதை தான் பின்னரேயே அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.

முழு உலகமும் மின்சக்தி பிரச்சினைக்கும், பூகோள வெப்பமாதல் அதிகரிப்பது தொடர்பான பாரிய பிரச்சினைக்கும் முகங்கொடுத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இத்தகைய மாநாடு நடைபெறுவது மிகவும் காலத்திற்குப் பொருத்தமானதாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

30 வருட காலமாக யுத்தம் இடம்பெற்ற வேளையிலும், அதன் பின்னரும் இலங்கையின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவும் பல்வேறு விரிவான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சில அடிப்படைவாதிகள் நாட்டில் கலவர சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிட்டார்.

எவ்வாறான போதும் கடந்த சில நாட்களாக இலங்கையில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற கலவர சூழ்நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இந்திய ஜனாதிபதி, மிக விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்திய ஜனாதிபதியின் செயலாளர் பரன் லால், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரங்ஜித் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்தியாவில் புது டில்லி நகரத்தில் நாளை 11 ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பிற்பகல் புது டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான செயலாளர் திருமதி ருச்சிகன் ஷாம் விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை வரவேற்றார். 

இலங்கைக்கான இந்திய தூதுவர் தரங்ஜித் சிங் மற்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் திருமதி சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி தங்கியுள்ள தாஜ் ஹோட்டலில் தூதரக அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.