இந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத்தை சேர்ந்த 32 வயதான சிராஜின்  மனைவி ஃபரா இந்த  தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் ஃபரா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

இரண்டாவது பிரசவத்திலும் அவருக்கு பெண் குழந்தையே பிறந்துள்ளது.

இதையடுத்து ஆண் குழந்தையை எதிர்ப்பார்த்து ஏமாந்து போன சிராஜுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஃபரா மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபராவிடம் சிராஜ் சண்டை போட்டு வந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி ஃபரா மீது சிராஜ் அசிட் வீசியுள்ளார்.

முகம், கை மற்றும் வயிற்றில் காயமேற்பட்ட  ஃபரா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பொலிஸாரிடம்  ஃபரா அளித்த வாக்குமூலத்தில்,

சிராஜ் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். இதை வைத்து சிராஜ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தால் ஆத்திரத்தில் ஆசிட் வீசியதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தலைமறைவாக உள்ள சிராஜை தேடி வருகிறார்கள்.