சட்டம்  ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய அதி­கா­ரிகள் எதிர்­வரும் காலங்­களில் அனைத்து குடி­மக்­க­ளி­னதும்  பாது­காப்பை எது­வித பார­பட்­ச­மு­மின்றி நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும்.  அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­படும் பிரச்­சி­னை­களை ஊட­கங்கள் மிகவும் பொறுப்­புடன் வெளி­யி­ட­வேண்டும் என சர்­வ­மதப் பேரவை தெரி­வித்­தது.

நாட்டின்  பதற்ற சூழ்­நிலை தொடர்­பாக செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றை சர்­வ­மதப் பேரவை நேற்று கொழும்பில் அமைந்­துள்ள இலங்கை மகா­போதி சங்­கத்தில் நடத்­தி­யது.இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  சம­யத்­த­லை­வர்கள் இவ்­வாறு தெரி­வித்­தனர்.

சர்­வ­மத பேர­வையின் இணைச்­செ­ய­லா­ள­ரான  இத்­தே­பானே தம்­மா­லங்­கார மக­நா­யக்க தேரர் தெரி­விக்­கையில், 

இலங்கை ஒரு சிறிய நாடு. பெளத்­தர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­வ­துடன் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக காலா­கா­ல­மாக ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­றனர். எங்­க­ளுக்­கி­டையில் சிறு சிறு சம்­ப­வங்கள் எங்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்­றாலும் பொது­வாக அனைத்து இன மக்­களும் சமா­தா­ன­மாக ஒற்­று­மை­யா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். 

என்­றாலும் அம்­பாறை, கண்­டி­போன்ற பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற சிறு சம்­ப­வங்கள்  வேறு­தி­சையில் திருப்­பிக்­கொள்­ளப்­பட்­ட­போதும் நாங்கள் அனை­வரும் ஐக்­கிய மாக வாழ்­வ­தற்கு வழி ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும். நாங்கள் மிகவும் குறு­கிய காலமே உலகில் வாழப்­போ­கின்றோம். இந்த குறு­கிய காலத்தில் இன,மத பேதங்­க­ளை­விட்டு ஒற்­று­மை­யாக சந்­தாே­ச­மாக வாழ­வேண்டும். கண்டி மாவட்­டத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் இன­வாத மோதல்­களில் இருந்து அனை­வரும் விலகி நடக்­க­வேண்டும். அத்­துடன் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­ப­டும்­போது அனை­வரும் பொறு­மை­யு­டனும் மனி­தா­பி­மா­னத்­து­டனும் சிந்­தித்து செயற்­ப­ட­வேண்டும் என்றார். 

 கிறிஸ்­தவ மதம் சார்­பாக பேராயர் கர்­தினால் அதி­வண மல்கம் ரன்ஜித் ஆண்­டகை தெரி­விக்­கையில், 

இலங்கை அழ­கான நாடு. அத­னால்தான் வெளி­நாட்­ட­வர்கள் இங்கு வரு­கின்­றனர். மனி­தர்­களும் பல்­வே­று­வ­கையில் அழ­கா­ன­வர்கள். அத­னால்தான் ஒரு­வ­ருக்­கொ­ருவர் முகங்­களை பார்த்­துக்­கொள்­கின்­றனர். அதே­போன்றே எமது சூழலும் வித்­தி­யா­ச­மா­னது.அந்த வித்­தி­யாசம் மத,கலா­சா­ரங்கள் கார­ண­மாக இருக்­கலாம். நாங்கள் இந்த மாற்­றங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­க­வேண்டும். அந்த வித்­தி­யா­சங்­களை இல்­லா­ம­லாக்க முயற்­சிக்­கக்­கூ­டாது.

அத்­துடன் ஒரு­சிலர் எங்­க­ளைப்­போன்று மற்­ற­வர்­களும் இருக்­க­வேண்டும் என நினைக்­கின்­றனர். அவ்­வாறு செய்­ய­மு­டி­யாது. அது இயற்­கைக்கும் முர­ணாகும். சிங்­கள மக்­க­ளுடன் தமிழ் முஸ்லிம் மக்கள் வர­லாறு கால­மாக இணைந்து வாழ்ந்து வரு­கின்­றனர்.

அத்­துடன் மதங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டு­வரும் கலா­சார மாற்றம் ஒரு­சி­ல­ருக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்த அச்சம் கார­ண­மாக திக­னயில் இடம்­பெற்­ற­து­போன்ற சம்­ப­வங்­களில்  முட்­டாள்த்­த­ன­மாக சிலர் கலந்­து­கொள்­கின்­றனர். இந்த அச்­சத்தை போக்­க­வேண்டும். நாட்டில் எங்­க­ளுக்­கென்று உரிமை, அடை­யாளம் என்று ஒன்று இருக்­கின்­றது. மத அடிப்­ப­டை­யி­லான கலா­சார மாற்­றங்கள் இருக்­கின்­றன. அதனை நாங்கள் பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும்.

அதே­போன்று பெரும்பான், சிறு­பான்மை என்று பிரிந்­து­வி­டாமல் அனை­வரும் சகோ­த­ரர்­க­ளாக வாழ­வேண்டும். அனைத்து மதங்­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­க­வேண்டும். மத அடிப்­ப­டை­யி­லி­ருந்து யாரையும் தூரப்­ப­டுத்த முடி­யாது. அவ்­வாறு இடம்­பெ­று­மாக இருந்தால் அடிமை நிலைக்கு ஆளா­கு­வார்கள். அத்­துடன் நாட்­டுக்குள் பெளத்­தர்­களின் அடை­யாளம் இல்­லா­மல்­போகும் என்ற அச்சம் சிங்­கள மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது. அத­னை­போக்க நாங்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அதன்­மூ­லமே மத ரீதி­யி­லான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வதை தவிர்த்­துக்­கொள்­ளலாம் என்றார். 

இந்­து­மதம் சார்­பாக கலந்­து­கொண்ட சிவஸ்ரீ கே.வி.கே.வைதீஸ்­வர குருக்கள் கருத்து தெரி­விக்­கையில், 

எமக்­கி­டையில் ஒற்­று­மை­யீனம் கார­ண­மா­கவே  30 வருட யுத்­தத்­துக்கு நாங்கள் முகம்­கொ­டுத்தோம். மீண்டும் அவ்­வா­றா­ன­தொரு நிலைக்கு செல்ல முடி­யாது. ஒரு இனம் மற்ற இனத்தை, ஒரு­மதம் மற்ற  மதத்தை மதித்து நடக்­க­வேண்டும். இது தவறும் பட்­சத்­தில்தான் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான பிரச்­சி­னைகள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வீழ்ச்­சி­ய­டை­யச்­செய்­வ­துடன் சர்­வ­தேச மட்­டத்தில் எமது நாட்­டுக்கு அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றன. அதனால் இன, மத பிரச்­சி­னை­களை தூண்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் சட்­ட­ரீ­தியில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றார்.  

இஸ்லாம் மதம் சார்­பாக சர்­வ­ம­தப்­பே­ர­வையின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பினர் சட்­டத்­த­ரணி ஜாவித் யூஸுப் தெரி­விக்­கையில், 

இனங்­க­ளுக்­கி­டையில் சிறு சிறு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வது சாதா­ர­ண­வி­டயம். அதனை நாங்கள் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்­துக்­கொள்­ள­வேண்டும். கண்­டியில் இடம்­பெற்ற சம்­ப­வ­மா­னது குறிப்­பிட்ட ஒரு குழு­வி­னரால் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாகும். இந்த பிரச்­சினை இரண்டு இனங்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்­ற­தொன்­றல்ல.

அத்துடன் திகன பிரதேசத்தில் அசம்பாவிதம் இடம்பெறும்போது அங்குள்ள சிங்கள மக்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. வெளிப்பிரதேசத்தில் இருந்துவந்த சிலரே இதனை பூதாகரமாக்கினர். அத்துடன் முஸ்லிம் மக்கள் அங்கு தாக்கப்படும்போது பெரும்பான்மையான சிங்கள மக்கள் மற்றும் தேரர்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர். அதனால் பெரும்பான்மையான பெளத்த மக்கள் இதற்கு தொடர்பில்லை. அவர்கள் எதிர்த்து வந்தனர். சிறிய குழுவொன்றின் நடவடிக்கையாலே இவ்வளவு பாரிய அழிவு ஏற்பட்டது. எதிர்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு மதத்தலைவர்களின் வழிகாட்டல்கள் அவசியமாகும் என்றார்.