பிறந்த பச்சிளம் குழந்தையை பணத் தேவைக்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு பெண்ணையும் வவுனியா பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் ரூபா பணத்திற்கு விற்னை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குழந்தையை பிரசவித்த பெண்ணையும் குழந்தையை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்,

நாம் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டுள்ளோம். குழந்தையை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்த பெண்மணி ஆயிரம் ரூபாவிற்கே குழந்தையை வாங்கி ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

 

அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குழந்தை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.