வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் - ஐ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கத் தயராக இருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் தொடர் ஆணுஆயுத சோதனைகளால் வடகொரியா மீது தொடர் விமர்சனங்களையும், பொருளாதாரத் தடைகளையும் விதித்தது அமெரிக்கா.

இந்நிலையில், இருவருக்குமிடையிலான சந்திப்பானது உலக அரசியலில் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் தெரிவுசெய்யப்ட்ட பின்னர்  முதல் முறையாக கடந்த திங்கட்கிழமையன்று தென்கொரிய பிரதிநிதிகள் கிம்மை வடகொரியாவில் சந்தித்தனர். 

இந்தச் சந்திப்பு குறித்து கிம், "தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தென்கொரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யங் தெரிவிக்கையில்,

" கிம் அணு ஆயுதங்களை நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதை ட்ரம்பிடம் தெரிவித்தோம். 

வடகொரிய ஜனாதிபதி கிம்மை சந்திப்பது குறித்து நாங்கள் டிரம்பிடம் ஆலோசித்தோம். கிம்மை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் பதிலுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம்மை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,

"அணு ஆயுதங்களை நீக்கம் செய்வது பற்றி  தென்கொரியப் பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்தக் காலகட்டத்தில் வடகொரியா எந்தவித ஏவுகணை சோதனைகளையும் நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்படும் வரை  அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும்.  கிம்மை சந்திப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.