இன்று காலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் 10 நிமிட இடவெளியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இரு ஆசிரியர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 7.20 மணியிலிருந்து 7.30மணிவரை புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சுந்தர் ராஜ் வைஜெயந்திமாலா  55 வயதுடைய தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மீது முச்சக்கரவண்டி மோதியதுடன் அவ்விடத்திலிருந்து முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ளது. அப்பகுதியிலிருந்தவர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான ஆசிரியை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அடுத்த 10 நிமிடங்களில் புகையிரத நிலைய வீதியிலுள்ள பண்டாரிக்குளம் செல்லும் பிரதான சந்தியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஆசிரியை மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது துவிச்சக்கரவண்டியில் சென்ற சந்திரன் வசந்தி  42 வயதுடைய குருமன்காடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு ஆசிரியர்களும் விபத்துப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகைள வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.