கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும்  ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மக்கள் முண்டியடித்துக் கொண்டு உண வுப் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட் டிருந்ததை அவதானிக்க முடிந்தது . 

பொதுமக்கள் அதிகமாக சில்லறை பொருட்கள்,  மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள்  மற்றும்  ஆங்கில மருந்தகங்கள் என்பவற்றில் முன்டியடித்துக் கொண்டு கொள்ளவனவில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. எனினும்  ஹோட்டல்கள் வெருச்சோடிக்கிடந்தன. வங்கிகளில் நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. ஏ.டி.எம். (தன்னியக்க யந்திரங்களுக்கு) முன்னால்  அதிக சனக் கூட்டங்களைக்காண முடிந்தது. 

அதேநேரம் கண்டி நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. போக்கு வரத்துக்கள் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் காணப்பட்டன. 

அதேநேரம் இராணுவ பாதுகாப்பு மற்றும் பொலீஸ் ரோந்து நடவடிக்கைகளும் பொதுவாக இருந்தன. பிரதான சந்திகளில் கூட்டுப்படைகள் காவலில் ஈடுபட்டு வருகின்றன . இடைக்கிடை ஆகாயமார்க்கமாக சீ-பிலேன் மூலமான அவதானிப்பு நடவடிக்கைகளும் இடம் பெற்றன. புதன் கிழமை இரவு நீண்ட நேரம் ஆகாய மார்க்கமான அவதானிப்புக்கள் இடம் பெற்றன. 

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் இடைக்கிடை மோட்டார் சைக்கிள்களில் அல்லது முச்சக்கர வண்டிகளில் வந்த கோஷ்டிகள் ஆங்காங்கே கல் வீச்சு நடவடிக்கைகளுக்கு முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.   எனினும்  பாதுகாப்புத் தரப்பினர்  நடவடிக்கையை   அடுத்து அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகல் வேளையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபின் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்ட போதும் இரவு வேளைகளில் ஒருவித பீதியுடனே மக்கள் வாழ்கின்றனர். 

கண்டி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த அதிகமானோர்  பிரதான கிராமங்களில் உள்ள உறவினர்களது வீடுகளுக்கு வந்து தஞ்சமடைந்துள்ளனர். 

திகனை, மெனிக்கின்ன, தெல்தெனிய பகுதிக்கடைகள் தாக்கப்பட்டதன் காரணமாக கும்புக்கந்துறை, ஹிஜ்ராபுர, பலகொல்ல, கெங்கல்ல, அலுத்வத்த  போன்ற பகுதிகளில் உள்ளோர் வெகு தூரம் வந்து மடவளை   போன்ற இடங்களில் பொருட்களை எடுத்துச் சென்றதையும் காண முடிந்தது. 

அதேநேரம் கட்டுகஸ்தோட்டை, நுகவல பகுதியில் உற்பகுதியில் அமைந்துள்ள என்டருதென்ன பகுதி மக்களே அவசர உதவி வேண்டி தகவல் அனுப்பி வருகின்றனர். அங்கு சுமார் 280 பேரளவில் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளதாகவும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது ஒருசிலர் தனிப்பட்ட முறையில் நிவாரணங்களை அனுப்பி வைத்தனர்.

சிறு குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும் இருப்பதாகவும் காடுகளில் ஓடி ஒளிந்த போது   காயமடைந்த சிலருக்கு அவசர முதலுதவிகள் கூட தாமதிப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது நிலைமை சீரடைந்து வருவதாக என்டருதென்ன பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் அவர்கள் பாடசாலையிலே தங்கியுள்ளனர். இங்கு 50 ற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன.