சகல இலங்கையர்களும் சமாதானத்துடனும் சக வாழ்வுடனும் வாழத் தேவையான அமைதியான சூழலை நாட்டில் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளதாக முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றிக் கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மிகச் சிறியதொரு இனவாத குழுவினரே இந்த குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்து சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

சகல இனங்களும் சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பாக இதன்போது முஸ்லிம் பிரதிநிதிகள் கவலை தெரிவித்ததுடன், அந்த பிரச்சினைகளை தடுப்பதற்கு இன, மத, பேதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இன, மத, பேதங்களை ஏற்படுத்தி அன்றுதொட்டு நாட்டில் ஏற்பட்டு வரும் இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குப் பொருத்தமான நீண்டகால தீர்வொன்றினை ஜனாதிபதியினால் மாத்திரமே பெற்றுக்கொடுக்க முடியுமென்பதனால் ஜனாதிபதியின் பதவிக் காலத்தினுள்ளேயே அத்தகையதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

அவ்வாறன சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கெதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சமூக ஊடகங்களின் ஊடாக இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இச்சந்திப்பில் இலங்கை ஜம்யத்துல் உலமா சங்கத்தின் தலைவர்களும் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.