நாட்டில் அசாதாரண சூழ்நிலையினை ஏற்படுத்தி ‍ஒற்றுமையினை சீர்குலைத்து  குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம்  கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என  ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்

கண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினையடுத்து நாட்டில் அமைதியை நிலைநாட்டி மீண்டும் வழமையான நிலைமையினை ஏற்படுத்தும் முகமாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

அத்தோடு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பாதுகாப்பு கட்டளைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் அது அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. மக்களுடைய பாதுகாப்பை கருத்திற் கொண்டே இக்கட்டளைச் நட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த கட்டளைச் சட்டத்துக்கு அமைவாக நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி மதங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக சாதாரண சட்டத்தின்படி வழங்கப்படும்.

தண்டனையை விட அதிக தண்டனை விதிக்கப்படும். அதாவது அச்சுறுத்தல் விடுத்தல், நபர்கள் மீது தாக்குதல் நடத்தல் ,கொலை செய்தல் ,கற்பழிப்பு மற்றும் சொத்துக்களை சேதமாக்கல் போன்ற செயற்பாடுகளின் போது இவ்வாறு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அது மாத்திரமல்லாமல் இவ்வாறான அசம்பாவிதங்களை ஏற்படுத்தத் தூண்டுவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக இவ்வாறானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸாரை போன்று முப்படையினருக்கும் அதிகாரம் உண்டு. ‍கைது செய்யும் அதிகாரம் மாத்திரமே முப்படையினருக்கு உண்டு மாறாக தடுத்து வைக்கும் அதிகாரமில்லை. 

இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக  நபர்களை முப்படையினர் உடனடியாக உரிய பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். பொலிஸார் அவர்களை விசாரணை செய்வர்.

மேலதிக விசாரணைகள் தேவைப்படின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கமைய  14 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்தலாம். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படும் சந்தேக நபர்களை பிணையில் எடுக்க வேண்டுமானால் விசேட காரணங்கள் வேண்டும் அல்லாமல் பிணையில் எடுக்க முடியாது. 7 நாட்களுக்கு இந்த நடவடிக்கைகளை வரையறுக்குமாறும் இதன் போது இன மத மொழி வேறுபாடுகளை கடந்து பக்கச் சார்பின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு  ஜனாதிபதி முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். 

இங்கு பாதுகாப்புச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், 

 நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் சமாதானம் என்பவற்றை கருத்திற் கொண்டே இந்த விசேட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு தற்காலிக நடவடிக்கையே. அசம்பாவிதங்கள் இடம்பெற்ற பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

இன்று மாலை 4 மணிமுதல்  நாளை  4 மணிவரை அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் சில வேளைகளில் அதை விட முன்னரே அவசரகால சட்டத்தினை எடுக்கக்கூடும் அது நாட்டின் நிலைமையிணை கருத்திற் கொண்டே எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் கூட்டுப் படைகளின் பிரதானி அத்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோத்தாகொட உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.