அம்பாறை மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற இனவாத  வன்முறை சம்பவங்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். 

பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் என்ற ரீதியில் இவ்வாறான சட்ட விரோத மற்றும் வன்முறை சம்பவங்களை அனுமதிக்க போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

இந்த வன்முறைகள் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகளாகும். அரசியல் அதிகார மோகம் கொண்ட ஒரு குழுவின் சூழ்ச்சியே  இதன் பின்னணியில் உள்ளது எனவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, அம்பாறை, திகன பகுதியில் இடம்பெற்ற இன வன்முறைகள் தொடர்பிலும் அவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறக் கூடாது  என்பதை  வலியுறுத்தியும் ஜே.வி.பி தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமாகிய அனுரகுமார திசாநாயகவினால் கொண்டுவரப்பட்ட  சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

பிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில்

கடந்த  மாதம்  26ஆம் திகதி இரவு அம்பாறை  டீ.எஸ்.சேனாநாயக்க வீதியில் காசிம் ஹோட்டலில் உணவு அருந்துவதற்காக சென்ற நபரொருவருக்கு வழங்கப்பட்ட உணிவில் ஏதோவொரு வகை பொருளொன்று இருந்தமை தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதல்கள் இறுதியில்  வன்முறை சம்பவமாக மாற்றம் பெற்றுள்ளன.  இதனை தொடர்ந்து வன்முறையாளர்களினால் அந்த வர்த்தக நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் நான்கும் பள்ளிவாசல் ஒன்றும் சேதமாக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் இடம்பெற்ற உடனேயே தேவையான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். எனினும்  சட்டத்தை செயற்படுத்துவதில் சில குறைபாடுகள் காணப்பட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் சம்பவம் தொடர்பாக தனியான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை கடந்த 22ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் கரலியத்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் லொறியொன்றின் சாரதியொருவருக்கு முச்சக்கர வண்டியில் வந்த 4 முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல்  இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 4ஆம் திகதி இரவு அடிப்படைவாத குழுவொன்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டுள்ளதுடன் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்தியுள்ளது. 

 இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் , நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். அதனையும் நாம் மறுக்கக் கூடாது. இதன்படி பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டனர்.  ஆனாலும் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவத்துடன்  தொடர்புடைய 24 பேர் தெல்தெனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தெல்தெனிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்கையில் மீண்டும் நேற்று  (நேற்று முன்தினம்) பகல் நேரத்தில் இனவாத குழுவொன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டுள்ளதுடன் 4 வர்த்தக நிலையங்களுக்கும் 2 பள்ளிவாசல்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது..  இதனால் வன்முறை மேலும் பரவாத வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று (நேற்று முன்தினம்) பகல் முதல் இன்று (நேற்று) அதிகாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது. ஆனபோதும் தெல்தெனி மற்றும் பல்லேகல பகுதியில் ஊரடங்கு சட்டம் தொடர்கின்றது. 

இதேவேளை திகன  பகுதியில் எரிந்த வர்த்தக நிலையமொன்றுக்குள்ளிருந்து 24 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று (நேற்று முன்தினம்) மாலை தேசிய பாதுகாப்பு சபை கூடியது. இதன்போது வழமைப்போன்று மக்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியவாறான சூழலை உருவாக்குவதற்கும் , குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறும் , எவ்வேளையிலும் அமைதியின்மை நிலைமை ஏற்பட்டால் நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் தயாராக இருக்குமாறும் பாதுகாப்பு பிரதானிகளுக்கும் மற்றும் பொலிஸாருக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை நேற்று இரவு முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் , மதத்தலைவர்கள் , பொலிஸ் மா அதிபர் , பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் ஆகிய தரப்பினருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினோம்.

இந்த இனவாத மற்றும் வன்முறை செயற்பாடுகளை அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் என்ற ரீதியில் இவ்வாறான சட்ட விரோத மற்றும் வன்முறை சம்பவங்களை அனுமதிக்க முடியாது. 30 வருடகால கொடூர  யுத்தத்தில் இன்னல்களை சந்தித்த நாடு என்ற ரீதியில் சமாதானம் , ஒற்றுமை மற்றும் சுதந்திரத்தின்  பெறுமதியை நாங்கள் எல்லோரும் நன்கு அறிவோம். அரசியல் அதிகார மோகத்தில் இருக்கும் சில பிரிவினர் மக்களின்  ஐக்கியத்தை  சீர் குலைக்க பல்வேறு தந்திரங்களையும் , பல்வேறு செயற்பாடுகளையும் திட்டமிட்டு வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. 

அவர்களின் ஒரே ஆயுதமாக இனவாதமே இருக்கின்றது. அதன் மூலம் அச்ச நிலைமையை ஏற்படுத்தி மக்களின் சாதாரண  வாழ்வை சீர்குலைத்து அதிகாரத்தை கைப்பற்றுவதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கின்றது. இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களை தவறான திசையில் கொண்டு சென்று பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களின் ஊடாக திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை பரப்புகின்றனர். இது திட்டமிட்டு செய்யப்படுகின்றது. என்பது வெளிப்படையாகியுள்ளது.

குழுவொன்று சமூக வலைத்தளங்களின் ஊடாக திட்டமிட்டு கடந்த மாதம் 9ஆம் திகதி முஸ்லிம் இனத்தால் சிங்கள இனத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாக குறிப்பிடும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொய்யான புள்ளி விபர தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில முஸ்லிம் அமைப்புகளும் இதற்கு பதில்களை வழங்கியுள்ளன. நீண்ட காலமாக இந்த குழு இனவாதத்தை பரப்பியுள்ளது. இதன் மூலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு பெரும்பான்மையானவர்கள் சிங்கள பௌத்தர்களே. சிங்கள பௌத்தர்கள் என்ற ரீதியில் நாங்கள் அந்த உரிமைகளை பாதுகாப்போம். அதற்கு பாதிப்புகள் ஏற்படவில்லை. அச்சுறுத்தலும் கிடையாது. அவ்வாறாக நடக்கவும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

இலங்கையர் என்ற ரீதியில் வேறு இனங்கள் மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கின்றார்கள். சகல மதத்தவர்களும் இடையூறுகள் இன்றி தமது கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதற்கும் , மதத்தை பின்பற்றுவதற்கும் உரிமைகள் இருக்கின்றன. நாம் இவற்றை பாதுகாப்போம். இந்நிலையில் முஸ்லிம் வணக்கஸ்தலங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக நாங்கள் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறான திட்டமிட்ட மற்றும் சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.  

இந்த அமைதியின்மை நிலைமையின் போது மிகவும் பொறுமையாக மற்றும் சிந்தித்து நடந்துகொண்டு நிலைமையை கட்டுப்படுத்த ஒத்துழைத்த பௌத்த குருமார்கள் , இஸ்லாமிய தலைவர் அடங்கலாக மதத் தலைவர்களுக்கும்  பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் மற்றும் மற்றைய மக்கள் பிரிவினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோன்று இந்த சம்பவத்தின் போது பாதிப்புக்குள்ளான உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்காக துரிதமாக நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும். இனவாதம் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கும் தேசத் துரோகிகளின் வலையில் சிக்கிவிடாது பொறுமையாக , சிந்தித்து செயற்படுமாறு நான் நாட்டின் சகல மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் குற்றவாளிகளை ஒருபோதும் தப்பிக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.