இந்தோனேசியாவைச் சேர்ந்த கிராம மக்கள் அரிய வகை சுமத்ரா இன புலியை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடூரமான செயலில் ஈடுபட்டனர். அழிந்து வரும் இனமான சுமத்ரா புலியை கொன்றுள்ளனர்.

இந்த புலியானது பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததனால் கோபமடைந்த மக்கள் புலி தூங்கிக்கொண்டிருக்கும் போது அதனை அடித்து கொன்று பொது இடத்தில் தொங்க விட்டுள்ளனர். பின்னர் ஒரு கூடாரத்தின் உள்ளே மறைத்து வைத்திருந்ததை அறிந்த வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை புலியின் உடலை மீட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் கூறுகையில்,

‘புலியின் உடலில் சில பாகங்கள் திருடப்பட்டுள்ளன. அதன் தோல் மற்றும் பற்களை திருடி விற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

அழிந்து வரும் இனமான சுமத்ரா புலியானது பாதுகாக்க வேண்டிய உயிரினமாக கருதப்படுகிறது. சுமத்ரா தீவில் மொத்தம் 400-500 சுமத்ரா இன புலிகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் புலி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.