நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப் படுத்தவதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாகவும் மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரமே பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர்  தெரிவித்தார்.  

இந்நிலையில், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கண்டி, திகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையையடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.