பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரும்  நம்பிக்கை யில்லா பிரேரணையை பொது எதிரணி  இன்று சபாநாயகரிடம் கையளிக்கும் என்று அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினரும்  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.   

Image result for விமல் வீரவன்ச  virakesari

இதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள   நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி ஆதரிக்கும்  எனவும் ஆட்சியை வீழ்த்தும் வரையில் நெருக்கடி கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணையை  கொண்டுவரவுள்ள நிலையில் பொது எதிரணியும் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது. இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவரவுள்ளோம். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று சபாநாயகரரிடம் ஒப்படைக்கவுள்ளோம். பொது எதிரணியின்  52 உறுப்பினர்களும் இதில் கைச்சாத்திட்டுள்ளதுடன் ஏனைய தரப்பின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவரை நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. 

ஆகவே அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் எமது  ஆதரவை வழங்குவோம், அதேபோல் நாம் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அணியின் ஆதரவையும் பெற்றுக்கொள்வோம். எம் அனைவரதும் நோக்கம் ஒன்றாக உள்ள நிலையில் முரண்பாடுகள் ஏற்படாது நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்வதே இப்போதுள்ள தேவையாகும். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊழல் அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே மக்கள் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ அணியினை ஆதரித்தனர். ஆகவே இந்த அரசாங்கம் மக்கள் பலம் இழந்துவிட்டது என்பதை இன்று ரணில் -மைத்திரி கூட்டணி அறிந்துள்ளது. 

 இனியும் இவர்கள் ஆட்சியினை கொண்டுசெல்ல முடியாது. நாளுக்கு நாள் போராட்டங்களும் மக்கள் எதிர்ப்பு அலைகளும் அதிகரிக்கும். கள்ளர்களை காப்பாற்றும் இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் வரையில் எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கள்ளர்களை காப்பாற்றுகின்றார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆணையாளர் அர்ஜுன் மஹேந்திரன் தேடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் சிங்கப்பூர் சென்றார்.  மாநாட்டில் கலந்துகொள்ள சென்றதாக கூறுகின்றார். ஆனால் அவர் கள்ளர்களை சந்திக்கவே அங்கு சென்றார். இன்று நாட்டில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளை பிரதமரே காப்பாற்றி வருகின்றார். இந்த ஆட்சி இருக்கும் வரையில் கள்ளர்கள் தண்டிக்கப்படப் போவதில்லை. மீண்டும் எமது ஆட்சியினை நாம் கைப்பற்றிய பின்னர் சகல குற்றவாளிகளையும் தண்டித்து நியாயத்தை நிலைநாட்டுவோம் எனவும் அவர் குறிபிட்டார்.