வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாஞ்சோலை எல்லை வீதியை அண்டியுள்ள சுமார் 20 பேருக்குச் சொந்தமான காணிகளில் உள்ள வேலிகள், மரங்கள் மற்றும் குடிசைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விளைவிக்கப்பட்டதான முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாஞ்சோலை எல்லையை அண்டியுள்ள பகுதியில் இரவோடிரவாக காணிகள், மரங்கள், குடிசைகள் இந்தெரியாதோரால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி பாதிக்கப்பட்டோர் கூறும்போது, 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து விடியும்வரை மாஞ்சோலை எல்லை வீதியை அண்டியுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளிலுள்ள வேலிகள், பயன் தரும் மரங்கள், மற்றும் குடிசைகளும் இன்னபிற சொத்துக்களும் விஷமிகள் சிலரால் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவே இவ்விதம் முஸ்லிம்களின் பாரம்பரிய காணிகளுக்குள் அத்துமீறி சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நாங்கள் எவரது காணிகளையும் அடாத்தாகப் பிடிக்கவோ அத்துமீறிக் குடியேறவோ இல்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எமது பாரம்பரிய இடங்களுக்கே மீளக் குடியேறியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.