ஆர்.யசி

ஒரு சில நாட்களில் ஏன் ஒரு சில மணித்தியாலங்களைக் கூட ஒப்பந்தத்தை மீறிய அடுத்த போராட்டங்கள். 

இதனிடையில் 2018. 02.24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடி 30 நாட்கள் போர் நிறுத்தத்தை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்கின்றது.  பல ஆண்டுகளாக களத்தில் குருதி கண்ட அமெரிக்கா  30 நாட்கள் ஓய்வை விரும்புகின்றது. ஆனால் புதிய நண்பனான ரஷ்யா ஓய்வை விரும்பவில்லை. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேர போர் நிறுத்தம் போதும் என்ற நிபந்தனையில் தொடர்ச்சியாக யுத்தத்தை நடத்தி வருகின்றது. 

ஒரு நாட்டின் அரசியலை யுத்தங்களே தீர்மானிக்கின்றன. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும்,யுத்தங்கள் அரசியலை தீர்மானிப்பதும் முடிவற்ற சுழற்சியாகும். ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்திலும் கோடிக்கணக்கான வலிகள் நிறைந்திருக்கின்றன. போராட்டங்களுக்காகவே பலநூறு ஆண்டுகளை மக்கள் கழித்துள்ளனர். உணவுக்கும், உரிமைக்கும் நிம்மதிக்குமாகவே  எத்தனையோ பாடுகளை பட்டுள்ளனர். 

இன்றைய நவீன, தொழில்நுட்ப காலத்திலும் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் நிறைவடைந்ததாக இல்லை. மத்திய கிழக்கினை பொறுத்தவரை இன்றும் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில்  உலகின் முழுமையான பார்வை சிரியாவை நோக்கித் திரும்புகின்றது. சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ். சரித்திரத்தில் அழுத்தமாக பதியப்பெற்ற நகரம்.  உலகில் மக்கள் வசித்து வரும் பழமையான  சில நகரங்களில் சிரியாவும் ஒன்றாகும். 

எனினும் இன,மத மோதல்களில் சிக்கி தமது இனத்தை அழித்துக்கொள்ளும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்துவிட்டது. உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கு முன்பிருந்தே சிரியாவில் வாழ்வாதார போராட்டங்கள் நிறைந்தே காணப்பட்டன. அரசியல் நெருக்கடி, ஊழல், இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் என பல திண்டாட்டங்களின் உச்சமே உள்நாட்டு கிளர்ச்சியாக பரிணாமம் எடுத்தது. ஆரம்பத்தில் அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டங்களின் ஒரு கட்டம், அதுதான் 2011 அரபு வசந்த போராட்டம். 

மத்திய கிழக்கின் அரபு வசந்தத்தால் ஈர்க்கப்பட்ட  ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்க்கும் கண்டனப்பேரணியை சிரிய அரசாங்கம் நசுக்கிய நிலையில் அதிலிருந்து நிலைகுலைய ஆரம்பித்தது சிரியா. இதன்  அடுத்தகட்டமே உள்நாட்டு போராட்டமாக பரிணாமமும் கண்டது.  சிறுபான்மையாக உள்ள சிரியாவினரின்  கரங்கள் ஓங்க ஆரம்பித்தமை மற்றும் ஒரே  கட்சியின் ஆட்சி நிலவுகின்றமை ஆகிய இரண்டு அடிப்படை காரணிகளை கொண்டு  மூன்றாம் உலக மகா யுத்தம் ஒன்றுக்கான பாதையினை அமைத்துவிட்டது. அத்தனைக்கும் வெறும் அதிகார பசி மட்டுமேயாகும். 

கடந்த  2011 ஆம் ஆண்டு சிரிய அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடங்கிய இந்த போராட்டம் இன்றுவரையில் நீண்டுகொண்டு செல்கின்றது. இதன் விளைவு ஒரு தசாப்த இனம் அழியப்பெற்றமையேயாகும். குழந்தைகள் பரிதாபகரமாக கொல்லப்படுகின்றனர்.  சிரியாவில் இடம்பெறுவது உள்நாட்டு யுத்தமாக கருதினால்கூட அதில் ஒரு தரப்பு வெற்றியை பெற்றாலும் அது தன்னைத்தானே வென்றுகொண்ட மாதிரி, தோல்வி என்றாலும் அது தனது கன்னத்தில் தானே அறைந்துகொண்டதற்கு ஒப்பாக அமையும். 

கொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.? (பகுதி 02)