(சியோலில் இருந்து லியோ நிரோஷ தர்ஷன் )

உலக ஊடகவியலாளர் மாநாடு தென் கொரியாவின் சியோல் நகரில் அமைந்துள்ள கொரிய ஊடகவியலாளர் மையத்தில் நாளை  திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது . 

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கெங் கியோங் ஹா தலைமையில் இடம்பெறவுள்ளது. பன்னாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர் .

கொரிய தீபகற்பப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள  அச்சுறுத்தலான நிலைமையினால் உலக அமைத்திக்கு ஏற்படக்  கூடிய ஆபத்தினை கருத்தில் கொண்டு நிலையான அமையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உலகிற்கு வலியுறுத்தும் வகையிலேயே இந்த உலக ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்படட்டுள்ளது. 

இந்நிலையில்  கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதக் குறைப்பு  தொடர்பில்  உலக ஊடகவியலாளர்களின் பங்ககளிப்பு என்ற தொனிப்பொருளில் ஒரு வார காலம் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இதன் போது நிலையான அமைதியை நோக்கிய கொரியாவின் பன்னாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் வெளிவிகார கொள்ளை உள்ளிட்ட கொரியாவின் தேசிய பொருளாதரம் மற்றும் கலாசாரம் என்பவை குறித்தும் இதன் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளது. 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கவனத்திற்குட்பட்டுள்ள வட கொரிய அணு ஆயுத பயன்பாடு குறித்து உலக நாடுகளின் ஊடகயவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தென் கொரியவின் எதிர்பார்ப்பாக உள்ளது.  ஆனால் வட கொரியாவின் தொடர் அச்சுறுத்தலான நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முழு அமெரிக்கா கண்டத்தையும் அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாகவும் ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தொலைக்காட்சி இவ்வாறான நெருக்கடியான சூழலில் அறிவித்தமை உலக நாடுகளை  ஆச்சரியப்படவும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையிலும் அமைந்ததுள்ளதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.

மேலும் மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையையும் இந்த சூழலில் ஏவியிருந்தது. ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் பறந்தது என சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தின.  

இந்நிலையில் தென்கொரியாவின் பியோங்சாங்கில் இடம்பெற்ற  குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் கலந்து கொண்டார் .  

மூத்த உறுப்பினரான கிம் யோ-ஜாங் தான் தென்கொரியா செல்லும் முதல் கிம் குடும்ப உறுப்பினர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வது இருதரப்பு உறவுகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் என்று கருதப்பட்டது. இரு கொரிய நாடுகளும் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு கொடியின் கீழ் அணி வகுத்துச் செல்வது நிலையான அமைதிக்காக சமிஞ்சை என கருதப்பட்டது.

ஆகவே உலக நாடுகள் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என உலக நாடுகளிடம்   தென் கொரியா கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறானதொரு  சூழ்நிலையில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள உலக ஊடகவியலாளர் மாநாடு முக்கியமான ஒன்றென கொரிய ஊடகயவியலாளர் மையம் குறிப்பிட்டுள்ளது.