அம்பாறைத் தாக்குதல் சம்பவம் :  பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டதென்ன  ?

Published By: Priyatharshan

04 Mar, 2018 | 08:52 PM
image

அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார்.

அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்ககுவானூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஒலுவில் சுற்றுலா விடுதில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், முஸ்லிம்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;

நல்லாட்சியில் இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கூடாது. இச்சம்பவம் தொடர்பில் நான் மிகவும் கவலையடைகிறேன். அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னை அடிக்கடி தொடர்புகொண்டு இச்சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தார். நான் சிங்கப்பூரில் இருக்கும்போதும் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்புகொண்டு இதுபற்றி கலந்துரையாடினேன்.

சாட்சியங்கள் அழிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசாரணையை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட குழுவே இனி கையாளும். இதுதவிர, அம்பறை பள்ளிவாசல் பாதுகாப்பு வழங்க அங்கு பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்குமாறு பொலிஸாருக்கு உத்தவிடரப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்வதற்கு, பயமில்லாமல் சாட்சி சொல்ல முன்வரவேண்டும். சாட்சி சொல்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்‌கை எடுத்துள்ளோம். அத்துடன் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட சகலரும் புதிய விசாரணை மூலம் விரைவில் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

அம்பாறை தாக்குதலில் இதுவரை எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைளில் உள்ள பலவீனங்கள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்த நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தனது நிலைப்பாட்டை சொல்வதற்காக இன்று அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.

அம்பாறையில் தோன்றியிருக்கும் பதற்றநிலையானது, பிரதமரின் வருகையினால் இன்னும் அதிகரித்துவிடும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து இன்னும் குளிர்காய நினைக்கின்ற இனவாத சக்திகளுக்கு மத்தியில், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பிரதமர் எடுத்திருக்கும் முயற்சிக்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும்.

தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பித்துக்கொள்வதற்கு பல வகைகளிலும் முயற்சித்து வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற இடங்களிலுள்ள சி.சி.ரி.வி. பதிவுகளை களவாடிச் சென்றுள்ளனர். எனவே, அயலிலுள்ள சி.சி.ரி.வி. பதிவுகளை பரிசோதித்து தாக்குதலில் ஈடுபட்டோரை உடனடியாக கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்:

இத்த தாக்குதல் சம்பவத்தினால் அம்பாறை மாவட்டத்துக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களும் பீதியில் உள்ளனர். முஸ்லிம்களுக்கு இவ்வாறனதொரு கசப்பான சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது. தாக்குதலில் ஈடுபட்ட இனவாதக் கும்பலை கைதுசெய்து முஸ்லிம்கள் நல்லாட்சியில் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பள்ளிவாசல் தலைவர் ஹாரூன்:

நாங்கள் நாட்டில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கிறோம். முஸ்லிம்கள் மிக பக்குவமாகவும், பொறுமையோடும் நடந்துகொள்ள வேண்டும். ஒரு சிறிய குழுவே இந்த நாசகார வேலைகளை செய்கிறது. அதற்காக முஸ்லிம்களாகிய நாங்கள் பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொள்ள கூடாது. அவர்களுக்கு எங்களுடைய உயரிய நல்ல குணங்களை காண்பிக்கவேண்டும்.

கடந்த புதன்கிழமை பாரிய ஹர்தால் ஒன்றுக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தயாரானார்கள். ஆனால், நாங்கள் அதனைத் தடுத்தோம். அதேபோன்று  வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக அம்பாறை பள்ளிக்கு பெருந்திரளானோர் வருகைதரவிருந்தனர். விரும்பத்தகாத செயல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தினால் அவற்றையும் நாங்கள் தவிர்த்தோம்.

அம்பாறை பள்ளிவாசலில் நாளாந்தம் ஆண்கள், பெண்கள் என சுமார் 2000 முஸ்லிம்கள் பள்ளிக்கு வந்து தொழுகைகளில் ஈடுபடுவதிலும், பிரயாணங்களின் போது ஒய்வு எடுப்பதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும் வருகின்றார்கள். இதில் அரச ஊழியர்களே அதிகமானவர்கள். எனவே, அவர்களை பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.

இந்நிலையில், அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தில் அக்கறை காட்டிய ஜனாதிபதிக்கும் இங்கு வருகைதந்த பிரதமருக்கும், எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாததை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.

நம்பிக்கை நிதியம் ஆரம்பம்:

கலந்துரையாடல் முடிவடைந்த பின், அம்பாறையில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் நேரடி விஜயம் மேற்கொண்டனர்.

பிரதமரின் வேண்டுகோளின்பேரில், அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பள்ளிவாசல் வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்தார். இதன்மூலம் பள்ளிவாசலுக்கு வருகின்ற மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இருப்பினும் பள்ளிவாசல் நிர்வாகத்தை உள்ளடக்கிய வகையில் நாங்கள் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அம்பாறையில் தெரிவித்தார்.

இந்த நிதியத்துக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை அவசரமாக புனரமைத்து இயல்புநிலைக்கு திரும்புவதற்காக நீங்களும் இந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்யமுடியும். உதவ விரும்புகின்ற தனவந்தர்கள் அம்பாறை பள்ளிவாசல் தலைவர் ஹாரூன் உடன் தொடர்புகொள்ள முடியும் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56