ஒப்பந்தத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்னர் தற்போது வரையில் அவர்கள் அடைந்து கொண்டது ஏதுமில்லை. மாநில ஆட்சி மாற்றத்தின் போதும் மத்திய ஆட்சி மாற்றத்தின் போது இவர்களின் பகுதிகளுக்கு வருகை தரும் அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பிநம்பியே நாற்பத்தைந்தாண்டுகள் உருண்டோடி விட்டன. 

தற்போது இவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்வது முதல் பலநூறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

குளத்துப்புலா இறப்பர்தோட்டத்தின் பிரதான வாயிலில் பிரிவு ஒன்றுக்கான உதவி முகாமையாளர் அலுவலகம். அருகே செல்லும் மண் பாதையின் ஊடாக பிரவேசிக்கின்றபோது காணப்படுகின்ற சிறு மலைக்குன்றில் மலைச்சாமியொன்று காவல் தெய்வமாக வைக்கப்பட்டுள்ளது. 

தோட்டத்தொழிலாளர்கள் மரபியல் சமய  பழக்கமாக கருதப்படுகின்ற மலைச்சாமி வழிபாடு இங்கும் காணப்படுகின்றது. 

அதனைக் கடந்து செல்கின்ற ஒற்றையடிப் பாதையின் ஊடாக கீழிறங்குகின்றபோது தான் முதலாவதாக காணப்படுவது 1 ஏ லயன் அமைப்பாகும். இந்த லயனில் நான்கு காம்பறாக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் தலா பத்து சதுர அடிகள் கொண்டவை. இவை தான் முதன் முதலாக இந்த மக்களுக்காக இந்திய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பாகும். அதனையடுத்தே ஏனைய லயன்கள் அருகருகே அமைக்கப்பட்டன.  அன்று அமைக்கப்பட்ட இந்த லயன்களில் தற்போது வரையில் சிறு புனரமைப்பைக் கூட மாநில அரசாங்கமோ மத்திய அரசாங்கமோ மேற்கொள்ளாத நிலையே உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தில் வாழும் குடும்பங்களும் தமது குடும்பங்களில் ஏற்பட்ட விஸ்தரிப்பின் காரணமாக ஏற்பட்ட தேவைகளை  பூர்த்தி செய்து கொள்வதற்காக சிறு தகரங்கள், பலகைகள் மூலம் அந்தந்த காம்பறாக்களில் சிற்சில விஸ்தரிப்புக்களை மட்டும் மேற்கொண்டிருக்கின்றார்கள். 

லயன்களின் கூரைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக நிவர்த்தி செய்து கொண்டுள்ள இந்த மக்கள் ஒவ்வொரு காம்பறாக்களிலும் ஆகக்குறைந்தது இரண்டுக்கும் குறையாத முதியயோர் நான்கு பேருக்கு மேற்பட்ட வயது வந்தவர்கள் இரண்டுக்கு மேற்பட்ட சிறுபிள்ளைகளும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். பொருள் பண்டங்களோ, தளபாடங்கள் என்றே சொல்லக் கூடியளவு எவையும் இல்லை. சமையல் பாத்திரங்களும், மற்றும் சில தளபாடங்களுமே அவர்களின் சொத்துக்கள். மிகவும் பரிதாபகரமான வகையில் நகர்கிறது அவர்களின் அன்றாட வாழ்க்கை, நிலைமையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. 

அவ்வாறிருக்கையில் தமது நிலைமைகளின் யதார்த்தம் குறித்து கூட பேசுவதற்கு ஆரம்பத்தில் பெரும் தயக்கம் காட்டினார்கள். தங்களின் உண்மை நிலை வெளியே வந்தால் தற்போது நகரும் வாழ்வைக் கூட நகர்த்த முடியாத அளவிற்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடலாம் என்ற பெரு அச்சமே அந்த தயக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது. 

இருப்பினும் அங்குள்ள முதியோர் தொடர்ந்தும் அமைதி காத்துக்கொண்டிருக்க முடியாது. என்ன நடந்தாலும் பரவாயில்லை.  நாம் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் எப்படி இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்றே கருதினார்கள்.  அதன் வெளிப்பாட்டால் தமது ஆதங்கத்தினை ஒவ்வொருவராக வெளிப்படுத்தலாயினர். 

முதியோரின் முன்வருகையைத் தொடர்ந்து இரண்டாம் சந்ததியாக விருக்கும் அவர்களின் பிள்ளைகளும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, தாமாகவே முன்வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன். அவை வருமாறு, 

வேந்தையா சிவனடி(வயது58) என்பவர் ஆரம்பம் முதல் தாம் அடைந்த இன்னல்களை கூறுகையில், 

நாங்கள் 1971ஆம் ஆண்டு இலங்கையின் வெலிமடை என்கிற இடத்திலிருந்து வந்தோம். அப்போது எங்களுக்கு இது தற்காலிகமான குவாட்டஸ் என்று சொல்லித்தான் கொடுத்தார்கள். 

எனது தாய், தந்தை உட்பட சகோதரங்கள் அவர்களின் பிள்ளைகள் என 18பேருக்கு ஒரு காம்பறா தான் ஆரம்பத்தில் வழங்கினார்கள். நாங்கள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு இருந்தோம். இந்திராகாந்தி வழியில் வந்த ராஜீவ் காந்தி எங்களின் பிரச்சினைகளை நல்லாத் தெரிஞ்சவையள் என்கிறதால விடிவு கிடைக்கும் என்று நம்பினோம்.  கடைசியில என்னோட சகோதரங்கள் ஒன்பது பேரை நான் பிரிஞ்சு விட்டேன். நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரிக்க அவர்கள் எங்கோ போய்விட்டார்கள். கடந்த வாரம் தான் அருகில் இருந்த எனது அண்ணாவும் இறந்து விட்டார். நாங்கள் இலங்கையில இருந்து வந்ததால எங்களுக்கு வேலையைக் கொடுத்து விட்டார்கள். ஆனால் நிரந்தர சம்பளம் கிடையாது. நாள் சம்பள வேலை தான்.  

இருந்தாலும் நாங்கள் 56 வயது வரையில் வேலை செய்யலாம். இப்போது பெஞ்சன் எடுத்து விட்டேன். எனக்கு பெஞ்சன் காசு மாதம் ஆயிரம் ரூபா கிடைக்கிறது. நான் பெஞ்சன் எடுத்த பிறகு அதோட என்ர ஒரு மகனுக்கும் வேலை கொடுத்திருக்கினம்.

எனக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண்கள்,  இரண்டு பெண்கள். ஒரு பெண்பிள்ளை இறந்து விட்டார். மற்றொரு பெண்பிள்ளைக்கு திருமணமாகிவிட்டது. ஆண்பிள்ளைகளில் ஒருவருக்கே வேலை கிடைத்திருக்கின்றது. மற்றவர் மரத்தால் விழுந்து நடக்க முடியாது இருக்கின்றார். இப்போது அவருக்கு ஒரு வீல் கதிரை கூட வாங்க முடியாது உள்ளேன்.

எனக்கு வரும் 1000 ரூபா பணத்தில் தான் நான் மனைவி, நடக்க முடியாதிருக்கும் எனது மகன் ஆகியோர் வாழ்க்கை நடத்துகின்றோம். என்னுடன் மற்றைய மகன் இருந்தாலும் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவருடைய பெறுப்புக்களும் அதிகமல்லவா? எனக்கு 26நாட்களாக வழங்கப்பட்டிருந்த வேலை அவருக்கு வெறும் இருபது நாட்கள் தான் கசுவலாக(நிரந்தரமற்றது) வழங்கியுள்ளார்கள். 

இப்போது தோட்டத்திற்கு வெளியில் சென்று வேலை தேடினாலும் கிடைப்பது கடினமாக உள்ளது. நாற்பது வருசத்துக்கும் அதிகமாய் இங்கு இருக்கின்றோம். எங்களுக்கு என்று ஒரு துண்டு நிலம் இல்லை. இந்த பத்து சதுர அடிக்குள் தான் எங்கள் வாழ்க்கை செல்கின்றது. 

இங்கு வருகின்ற அனைத்து கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகளிடத்திலும் நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் எதுவுமே நடப்பதாக இல்லை. தற்போது கூட ஆட்சியில் உள்ள தொழிற்சங்கத்தினரிடம் எங்களின் விடயத் தினை கூறினோம். கேரளா சர்க்காரிடம் (கேரள அரசு) எங்கள் விடயம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க இயலாது. கேந்திர சர்க்கார்(மத்திய அரசு) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கூறு கின்றார் கள். 

நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பன் என்று தெரியவில்லை. ஒநேரமோ இரண்டு நேரமே உணவை சாப்பிட்டு எமது வயிற்றை பார்த்துக்கொள்வோம். ஆனால் எங்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் நிலைமை என்ன? அவர்களுக்கு எங்களுக்கு கிடைத்த அற்ப சலுகைகள் கூட கிடைப்பதில்லை. வேலை நாட்களும் குறைக்கப்பட்டு விட்டன. அது தொடர்பில் கேட்டால் அவர்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்று பதிலளிக்கின்றார்கள். 

இந்த விடயங்களை கையாள்வதற்குரிய தலைமை அலுவலகம் தமிழகத்தில் உள்ளது. அந்த அதிகாரிகள் இங்கு வருவது கூட கிடையாது. அவர்கள் திருவனந்தபுரம் வருகின்றார்கள். அங்கு சொல்வதைக் கேட்டுவிட்டுச் சென்று விடுகின்றார்கள். 

இப்படித்தான் எங்களின் வாழ்க்கை செல்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. நாம் கூட்டாக இந்த விடயத்தினை பேச முனைகின்றபோதும் எங்கட மக்கள் வேறுவேறு தொழிற்சங்கங்களில் அங்கம் வகிப்பதால் அதனைச் சாதகமாக பயன்படுத்தி எமக்குள்ளே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிலைமையே ஏற்படுகின்றது. இதனால் எமக்காக குரல்கொடுக்க யாரும் இல்லாது அநாதைகளாக இருக்கின்றோம் என்று முழு மூச்சாக கூறி நிறைவு செய்தார். 

இவரைத்தொடர்ந்து மீனாட்சி அம்மா(வயது60), என்பவர் கூறுகையில்,

நாங்கள் 1972இல் இலங்கையின் நீலகிரியிலிருந்து இந்தியாவுக்கு வந்தோம். தோட்டங்களில்  நாங்கள் வேலை செய்தமையால் இங்கு வேலை செய்வது இலகுவானது என்று கருதியே இங்கு வருவதற்கு அந்த நேரத்தில் எனது கணவரும் சம்மதித்திருந்தார். 

எனக்கு ஏழு பிள்ளைகள். நானும் கணவரும் இந்த இறப்பர் தோட்டத்தில் தான் நாள் முழுக்க வேலை பார்த்து எங்களின் பிள்ளைகளை வளர்த்தோம். எங்களால் முடிந்த வரையில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதற்கு முயற்சிகளை எடுத்தோம். இருந்தாலும் முடியவில்லை. 

அவர்களும் இந்த தோட்டத்தில் தான் இப்போது நாள் சம்பளத்துக்கு வேலை செய்கின்றார்கள். எனது கணவன் இறந்து விட்டார். நாங்கள் இலங்கையில் இருந்து வந்ததால் இப்போது எனக்கு ஓய்வூதியமாக 902ரூபா மாதாந்தம் வழங்குகின்றார்கள். எனது மகளொருவருடன் நான் இருக்கின்றேன். 

என்னுடைய பேத்திக்கு ஒன்றரை வயதாகின்றது. குழந்தைக்கு இயற்கையான குறைபாட்டால் இப்போது அந்தக் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. அன்றாடம் உழைத்து குடும்பச் செலவுக்கே வருமானம் போதுமானதாக இருக்கின்றமையால் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கு கூடமுடியாது வீட்டுக்குள்ளே முடங்கிப் போயிருக்கின்றேன். 

எங்களின் நிலைமையில் என்னசெய்வது என்று அறியாது இருக்கின்றோம். குழந்தை தொடர்பாக வைத்தியரை பார்க்க சென்றால் வேலைக்கு லீவு போட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி லீவு போட்டால் வருமானம் இல்லாது போய்வி டும். எனது மகளும், மருமகனும் ஆழ்ந்த கவலையுடன் இருக்கின்றார்கள். எனக்கு கிடைக்கின்ற ஓய்வூதியம் எதற்குபோதும். கஷ்டத்தின் மேல் கஷ்டம் என்று பெருமூச் செறிந்தவாறு நிறுத்தினார்.

வெள்ளியன்று தொடரும்...

நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-01 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்