அடுத்த குறுகிய காலத்திலாவது பொருத்தமான அரசியல் மாற்றங் களை முன்னெடுக்க வேண் டிய கட்டாயம் உள்ளது. அடுத்த 18 மாத காலத்தில் தேசிய ரீதியில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தூய்மையான தேசிய அரசாங்கமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் அமைச்சர் மனோ கணேசன் போன்ற ஜனநாயக ரீதியில் செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகளை நாம் இணைத்துக்கொண்டு அதிக பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

கடந்த கால ஊழல் வாதிகள், கள்வர்களை தண்டிக்கும் செயற்பாட்டிற்குரிய அமைச்சுக்களை சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து பதில் கூறும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

இன்றைய நிலையில் நாட்டினை சரியாக முன்னெடுத்து செல்லக்கூடிய சரியான அரசியல் நிகழ்ச்சி நிரல் அவசியமாகின்றது.  தேசிய அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். அடுத்த 18 மாத காலத்தில் தேசிய ரீதியில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்காக  நாம் சகல விதத்திலும் செயற்பட்டு வருகின்றோம். இதன்போது தேசிய அரசாங்கமாக நாம் சகல தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இன, மத பேதமின்றி முன்நகர வேண்டும். இதில் பிரதானமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை ரீதியிலான தரப்பினை இணைத்துக்கொண்டும் நாட்டினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். 

எம்மால் அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். நிச்சயமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்லும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். குடும்ப அரசியல், சர்வாதிகார அரசியல், ஊழல் அரசியல் சக்திகள் எவற்றிற்கும் நாம் இனியொருபோதும் இடமளிக்கப்போவதில்லை. மாறாக எம்முடன் இணைந்து பயணிக்கும் ஜனநாயக கொள்கையாளர்களை நாம் இணைத்துக்கொள்ள வேண்டும். இதில் அமைச்சர் மனோ கணேசன் போன்ற ஜனநாயக ரீதியில் செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகளை நாம் இணைத்துக்கொண்டு செல்வோம். தற்போதையதை விடவும் பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களின் ஆதரவுடன் நாம் நாட்டினை பலமாக கட்டியெழுப்ப வேண்டும். 

அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட அமைச்சரே நான். எனினும் சட்டம் ஒழுங்கு அமைச்சினை எனக்கு கொடுத்தால் சரியாக இருக்கும் என அமைச்சர் மனோ கணேசன் கூறியதும் என்மீதான நம்பிக்கையிலேயேயாகும். அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். 

உண்மையில் இன்று முக்கியமான அரசியல் நகர்வொன்று அவசியமாகின்றது.  மாற்றங்கள் அவசியமானவை, அதற்காக நல்லாட்சியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றோம் எனக் கூடிக்கொண்டு சிகை அலங்காரம் செய்தோ, முகப்பூச்சு பூசியோ, அறுவை சிகிச்சை செய்தோ மாற்றத்தினை செய்ய முடியாது. மாறாக ஞான சிகிச்சை ஒன்றே அவசியமாகின்றது. அவ்வாறன மாற்றம் ஒன்றை முன்னெடுக்காது தேசிய அரசாங்கத்தினால் முன்னோக்கி பயணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.