இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனத்தின் இலவச அடிப்படை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த 8 ஆம் திகதி புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

அதன்படி, இணையதள சேவையைப் பொறுத்து, மாறுபட்ட கட்டணம் வசூலிப்பதற்கும், இலவச சேவைகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சேவை வழங்கும் நிறுவனம், பிற நிறுவனங்களுடன், நபர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, இணைய தள சம நிலை சேவையை பாதுகாக்கும் வகையில் எடுத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் தகவல்களுக்கு, எந்த இணையதளமாக இருந்தாலும், எந்த செயலியைப் பயன்படுத்தினாலும், சம கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ்சுடன் இணைந்து பேஸ்புக் உள்ளிட்ட சில அடிப்படை சேவைகளை இலவசமாக வழங்கி வந்த "ப்ரி பேசிக்ஸ்" திட்டம் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீரோ ரேட்டிங் பிளான் மாற்றம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டிராய் விதித்துள்ள இந்த தடை ஏமாற்றம் அளிப்பதாக பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் தனது இலவச அடிப்படை சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சலில், "இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலவச பேசிக்ஸ் திட்டம் இனி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.