நபர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பேசாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர் ஒருவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

மன்னார் பேசாலையை சேர்ந்த குறித்த அரச ஊழியர் அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான குறித்த இளைஞர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பேசாலை பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட அக்கிராமத்தைச் சேர்ந்த  அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியரான சந்தேக நபரை கைதுசெய்து இன்று திங்கட்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது தாக்குதல்களுக்குள்ளான நபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதிவான் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் குறித்த அரச ஊழியரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.