(எம்.எம்.மின்ஹாஜ்)

ஊழல் மோசடிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம். சுவாமிநாதன், அஜித் பீ.பெரேரா ஆகியோரை கொண்ட குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.

இதற்கு அப்பால் அரசியல் பழிவாங்கல் முறைப்பாடு தொடர்பாகவும் குற்றவியல் பல்கலைகழகம் நிறுவுவது தொடர்பாகவும் இரு வெவ்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டன.

சட்டம் ஒழுங்கு அமைச்சின் நடவடிக்கை தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று காலை அலரிமாளிகையில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, பொலிஸ் விசேட அதிரடி படையின் கட்டளை தளபதி எம்.ஆர் லத்தீப், குற்றவியல் விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி சேனாரத்ன உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு குழுக்கள் நிறுவப்பட்டன.