பாரீஸில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண் தீவிரவாதி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Paris

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதலில் 129  பொதுமக்கள் பலியானார்கள். 


தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தேடும்பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

துப்பாக்கி சூடு
பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட்-டெனிஸில் அதிகாலை தீவிரவாதிகளை தேடுதல் வேட்டையில் பிரான்ஸ் பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். 

இதனையடுத்து இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. துப்பாக்கி சண்டையில் பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால் இதுதொடர்பாக முழு தகவல் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. இருதரப்பு இடையே பலத்த சத்தத்துடன் துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.

தீவிரவாதிகள் பதில் தாக்குதல் தொடுத்ததை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. செயின்ட்-டென்ஸில் நகருடனான இணைப்பு சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொதுமக்களை வெளியே வரவேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டனர். மக்கள் ஜன்னல்களையும் திறக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். 

சுட்டுக் கொலை

துப்பாக்கி சண்டை நடைபெற்ற இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்திய இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். ஹெலிகொப்டரும் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மறைந்து இருந்த வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். 

பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை  செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சண்டை நடைபெறும் பகுதியில் பலத்த வெடிச்சத்தம் கேட்கிறது. இருப்பினும் வெடிகுண்டு வீசப்பட்டதா? என்ற தகவல் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. 

பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமீது அபோத்தை பிடிக்க பொலிஸார் முயற்சி செய்தபோது இச்சண்டையானது வெடித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 7 பேர் அங்கியிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சண்டையினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே பெண் தற்கொலை தீவிரவாதி தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார், இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலையே நீடிக்கிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.