மலையகப் பகுதிகளில் இரண்டு நூற்றாண்டு கடந்தும் “லயன்” அறைகளில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்காலம் தொடர்பாக தற்போதும் ஆணித்தனமான அழுத்தங்கள்  வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.

அவர்களின் அடிமை வாழ்க்கைக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இயற்கை அனர்த்தங்களையும் தாண்டி இலக்குகளை அடைவதற்கான அதிவிரைவு பயணத்தின் அவசியம் குறித்தும் ஆழமாக வலியுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

நாளைய பொழுது நல்லபொழுதாக விடிந்துவிடும். சுதந்திர சமுகமாக சஞ்சாரிக்க முடியும் என்ற பேரவா?

அந்த மக்கள் மனதில் வேரூன்றியிருக்கின்றது. அது அரசியல் சாயங்களைக் கடந்து விடுதலைக்கான வேட்கையை விரைவில் பெற்றுக்கொடுத்து விடும் என்பதில் அண்மைக்கால மாற்றங்களில் ஓரேளவு நம்பிக்கை கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு மலைக்குன்றுகளுக்குள் மல்லுக்கட்டி போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமுகத்தின் அவலத்தினையும் ஆதங்கத்தினையும் நாம் நேரயாகவே கண்டும் கேட்டும் இருக்கின்றோம். அவ்வப்போது இந்த மக்கள் மனங்களில் “ நாம் அன்று போயிருந்தால் எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது” “நமது பூமியில் நன்றாய் வாழ்ந்திருப்போம்” இப்படியெல்லாம் “லயன்கள்” என்ற சகதிக்குள் வாழும் எத்தனையோ பாட்டிகளும், தாத்தாக்களும் முனுமுனுப்பதை பலர் அறிந்திருப்பீர்கள்.

சில சமயங்களில், “பிழைப்புத் தேடி வந்தவர்கள் இப்படி துண்டு நிலம் கூட சொந்தமில்லாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டார்களே. சொந்த நாட்டில் இருந்திருந்தால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது ராஜவாழ்க்கை வாழ்ந்திருபார்கள்” என்று கூட நாம் மனதுக்குள் கருதுவதுண்டு. ஆனால், இரண்டு தலைமுறை கடந்த நிலையில் அதனை விட பரிதாபமான நிலையில் இருக்கின்றது ஒரு சமூகம்! நான்கு தசாப்த காலமாக மலையகத்தில் காணப்படும்.

அதே “லயன் அறைகளில்” சொல்லெண்ணாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றது அந்த சமூகம். மலையகத்தில் ஆகக்குறைந்தது சுயநலத்தின் அடிப்படையிலாவது ஏதோவொரு குரல் அந்த மக்களுக்காக ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், கேட்பார் யாருமில்லை. பார்ப்பார் யாருமில்லை. தமக்காக தாமே போராடவும் திராணியில்லை. ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக அடிமைசாசனம் எழுதப்பட்ட அடிமைகள் போன்று அச்சத்தின் பேரால் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது அந்த சமூகம்.

ஆம், கேரளாவில் 14மாவட்டங்களில் ஒன்றுதான் கொல்லம். மலையகப் பகுதிகள் போன்ற அதே சாயலில் தான் இந்த மாவட்டத்தின் அதிகமான பகுதிகள் உள்ளன. இறப்பர் தோட்டங்களும், விவசாய நிலங்களும் பரந்து விரிந்து இருகின்றன. இந்த மாவட்டத்தின் பிரதான நகரிலிருந்து சுமார் 58கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமம் தான் குழத்துப்புலா.

இங்கு இறப்பர் தோட்டங்களுக்கு பஞ்சமில்லை. பார்க்கும் இடங்கள் எல்லாம் இறப்பர் தோட்டங்கள் தான் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் தோட்டங்களில் சிலவற்றுள் தான் அவலங்களுக்கு நிறைந்து எமது உறவுகளும் இருக்கின்றார்கள். குளத்துப் புலா கிராமத்தில் “சிலோன் கொலனி” என்று அனைவராலும் அறியப்பட்ட பகுதியாக இவர்கள் வாழும் பகுதிகள் உள்ளன.

யார் இவர்கள்?

யார் இவர்கள்? கேரளாவில் எமது இரத்த உறவுகளா? என்று நம்மில் பலர் புருவத்தினை தூக்குவார்கள்?

இவர்கள் பற்றிய தகவல்கள் அதிகளவில் வெளியில் வருவதில்லை. இலங்கையிலிருந்து வந்தவர்களில் பலர் தமிழகத்தில் இருப்பதால் பலர் இந்த மக்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. இந்த மக்களும் தமிழினம்

அல்லாத இன்னொரு சமுகத்துடன் வாழ்வதால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சத்தால் பெரிதாக வாய்திறப்பதும் இல்லை.

இலங்கை வரலாற்றில் என்றும் கறைபடிந்த விடயமாகவுள்ள 1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினை நிறைவேற்றியது, இதன் விளைவாக, இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்படுதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு இலங்கைச் சனத்தொகையின் 11.7சதவீதமாக இருந்த இந்திய வம்சாவழி மக்களில் 975,000பேர் நாடற்றவர்களாகினார்கள்.

இந்த விவகாரம் பூதகாரமாகியது. நாட்டாற்றில் விடப்பட்ட மக்களுக்கு ஆகக்குறைந்தது அவர்களின் தாய் மண்ணான பாரதம் கைகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலவாறான நிலையில் எழுந்தன. இதன் பலனாக 1954இல், சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக இருந்த போது, அவருக்கும் அன்றைய இந்தியப் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குமிடையில் 1954 ஜனவரி 18ஆம் திகதி ‘நேரு-கொத்தலாவல’ ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வயதுவந்தவர்கள், இலங்கை வாக்காளர் இடாப்பில் இதுவரை பதிவு செய்திராதவர்களை உள்நாட்டில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் அதேநேரம் பின்னர் அப்பதிவில் இல்லாவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக கருதப்பட்டு அவர்கள் இந்திய மொழிகளில் ஒன்றைப் பேசுபவர்களாக இருந்தால் அத்கையவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

துரதிஸ்ட வசமாக அந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. 11.7 சதவீத இந்திய வம்வழி சனத்தொகையில் 0.7சதவீதமானவர்களுக்கு பிராஜாவுரிமையை வழங்கி விட்டு ஏனையவர்களை அரசாங்கம் கையாண்ட விதமானது மிகவும் மோசமாகவிருந்தது. இதன் விளைவால் அவர்களை தமது சொந்த மண்ணுக்கே திருப்பி அனுப்பி விடுவது தான் சிறந்தது என்ற பரஸ்பர வாதங்களும் எழுந்தன.

ஏவ்வாறாயினும் சௌமிய மூர்த்தி தொண்டமான் பிரதமர் ஜவர்கால் நேரு ஆகியோருக்கு இடையிலான டெல்லிச் சந்திப்புக்கள் பிரஜாவுரிமைக்காக ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு சாதகமாக அமைந்த போதும் 1964ஆம் ஆண்டு பிரதமர் நேருவின் திடீர் இறப்பு அத்தனைனையும் புரட்டிப்போட்டது. இலங்கையின் ஆட்சிக்கு வந்த பிரதமர் ஸ்ரீமவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தினை கையிலெடுத்தது.

நேருவின் பின்னர் பிரதமராக வந்த லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைளில் கொண்டிருந்த திடீர் மாற்றத்தினை சரியாக புரிந்து கொண்டு நாடற்றவர்கள் விவகாரத்தினை முன்னெடுத்து ஸ்ரீமா அரசாங்கம். அதன் விளைவால் 1964ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி சர்வதேசமே புகழும் அளிவிற்கு பெருமையான ஒப்பந்தமாக வர்ணக்கப்பட்டு “ஸ்ரீமா- சாஸ்திரி” ஒப்பந்தம் கைச்சாத்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 300,000 மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பிரஜா உரிமை வழங்கவும் 525,000 மக்களை சாஸ்திரி அரசாங்கம் மீளவும் இந்தியாவுக்கே அழைத்துக் கொள்வதும் என்றும் இருந்தது. இவ்வாறு அழைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒப்பந்தம் கைச்சாத்த காலத்திலிருந்து அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு நடைபெறும் என்றும் இணக்கம் ஏற்பட்டிருந்தது. 1983 கறுப்பு ஜுலை கலவரங்கள் இலங்கையிலிருந்து இந்திய வம்சாவழி மக்கள் விரைவாக வெளியேறுவதற்கு வழிவகுத்தது.

அவர்கள் தான் இவர்கள்

அவ்வாறு இலங்கையிலிருந்து வெளியேறிய மக்களில் அதிகமானவர்கள் தமிழகத்திற்கு செல்வதற்கு ஆசைப்பட்டனர். தோட்ட வேலையில் ஏற்பட்ட பெறுப்பினால் சிலர் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குச் சென்றால் வேறு ஏதாவது தொழில்களில் ஈடுபட முடியும் என்ற அலாதிப் பிரியத்துடன் மைசூர் போன்ற பகுதிகளுக்கு சென்றார்கள்.

எஞ்சியவர்கள் தோட்டத்தில் பணியாற்றிய அனுபவத்தால் இறப்பர், தேயிலை தோட்டங்கள் அதிகமாக காணப்படும் கேரள மாநிலத்தில் குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். இதன் காரணமாக 1970ஆம் ஆண்டு முதன் முதலாக கொல்லம் மாவட்டத்தின் குழத்துப்புலா பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான இறப்பர் தோட்டத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

அடுத்தடுத்த வருடங்களில் விரும்பியவர்கள் இதேதோட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். இறப்பர் தோட்டத்தின் நடுவே “பத்துக்கு பத்து” சதுர அடியாக நான்கு தொடர் “காம்பறாக்கள்” கொண்ட முதலாவது “லயன்” உருவாக்கப்பட்டு “1ஏ” என்று பெயரிடப்பட்டது.

“சிலோனில் பிரச்சினை அதிகரித்து விட்டது. தனித்தனி வீடுகளை கட்டி உங்களை குடியேற்றவே நாங்கள் விரும்புகின்றோம். தற்போது அதற்கு நேரமில்லை. உங்களின் உயிர்கள் எமக்கு முக்கியம். ஆகவே தான் தற்காலிகமாக இந்த குவாட்டஸ்ஸை உங்களுக்காக அமைத்துள்ளோம். நாங்கள் அதனை இலவசமாகவே தருகின்றோம். இந்த குவாட்டஸ் தற்காலிகமானது தான். நீங்கள் அதில் இருங்கள். சற்றுக்காலத்தில்

புதுவாழ்வை வாழ்வீர்கள்” என்ற சாஸ்திரி தலைமையிலான மத்திய அரசாங்கம் கவர்ச்சி அறிவிப்பினை விடுத்தது அந்த வார்த்தகைளை வாக்குறுதியாக நம்பி குறுகிய காலம் தானே நெருக்கடிகளை பொறுத்துக்கொள்வோம் என்று மனக்குள் நினைத்துக்கொண்டு ஒவ்வொரு குடும்பங்களும் லயனுக்குள் குடிபுகுந்தன. “1ஏ” லயன் 1சி, 2ஜே, 9பி, 2எச்,2எப், ரமணிக்குடியிருப்பு, சந்தனக்காவு இப்படி காலவோட்டத்தில் 62லயன்கள் இத்தோட்டத்தில் உள்ளன.

இதனைவிடவும் இத்தோட்டத்தில் ஏற்பட்ட இட நெருக்கடியால் குழத்துப்புலா பிரதேசத்தில் புணலூர், கூவக்காடு போன்ற பகுதிகளில் உள்ள அரசாங்க இறப்பர் தோட்டங்களிலும் லயன்கள் அமைக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டார்கள். அன்று அமைக்கப்பட்ட “சாஸ்திரி அரசின் தற்காலிக குவார்ட்டர்ஸ்” தற்போது வரையில் தற்காலிகமானவையாகவே உள்ளது. நாடற்றவர்களுக்கு பெயரளவில் நாடு கிடைத்து விட்டது என்றாலும் அடிப்படைத் தேவையான வீடு மற்றும் இதர வசதிகள்...? 

வெள்ளியன்று தொடரும்.........

(கேரளாவிலிருந்து ஆர்.ராம்)