இந்தியாவின்  கேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள் கையில் அரிசி மூட்டையுடன் ஒருவரை பார்த்துள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி உணவுபொருட்கள் திருடு போயுள்ளது. அப்போது சி.சி.டிவி கமராவில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தோடு இவரின் உருவம் ஒத்துப் போக பொதுமக்கள் அவரைப்பிடித்து சராமரியாக அடித்து உதைத்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படத்துள்ளனர்.

ஆனால் பொலிஸ் வாகனத்திலேயே மலைவாழ் வாலிபர்  சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

விசாரணையில் குறித்த வாலிபர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் 27 வயது மகன் மது  என்பது தெரியவந்துள்ளது.

குறித்த வாலிபரை திருடன் என தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். மேலும் அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வர, அவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் அந்த வாலிபரை தாக்கியவர்கள் பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.