கமலும் நானும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் ஒன்றுதான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அனைத்துக்கட்சி கூட்டம்  குறித்து கேட்டபோது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார் ரஜினி. 

கமலின் அரசியல் பயணம் குறித்து கேட்டபோது, ‘நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே. கமலின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. முழுவதும் பார்த்தேன்’ என்றார்.

கமல் கட்சி பொதுக்கூட்டத்தை நடத்தியது போன்று எப்போது பொதுக்கூட்டம் நடத்தி கட்சியை அறிவிப்பீர்கள்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினி, ‘இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதேபோல் தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் அடுத்தகட்ட முடிவு பற்றி அறிவிப்பேன்’ என்றார்.