பன்னிரண்டு வாரங்களுக்குள் இலங்கை மதிப்பில் சுமார் பதினான்கு கோடி ரூபாவை நிறுவனம் ஒன்றுக்குச் செலுத்துமாறு ‘சுப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு இந்திய மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கோச்சடையான்’ படத் தயாரிப்புக்காக ‘அட் பியூரோ’ என்ற நிறுவனத்திடம் ‘மீடியா வன் க்ளோபல்’ என்ற நிறுவனம் இந்திய மதிப்பில் பத்துக் கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தது. மீடியா வன் நிறுவனத்தின் இயக்குனர்களுள் லதா ரஜினிகாந்தும் ஒருவர்.

இந்தப் பணத்துக்குப் பதிலாக கோச்சடையான் திரைப்படத்தின் உள் நாட்டு வினியோக உரிமையை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதாக ஒப்பந்தம் இடப்பட்டிருந்தது.

எனினும் பட வேலைகள் பூர்த்தியானதும் அதன் உள் நாட்டு வினியோக உரிமை ‘ஈரோஸ் இன்டர்நெஷனல்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ரஜினியின் மகளும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அட் பியூரோ நிறுவனம் தொடுத்த வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.