நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் லிந்துலை பெயார்வெல் ஆற்றுப்பகுதியில் காரொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பெயார்வெல் ஆற்றில் நேற்று மாலை 300 அடி பள்ளத்தில் காரொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் யக்கல கிரிந்திவெல பகுதியை சேர்ந்த 34 வயதுடைய  வசந்த ரஜித்சந்திர வனசிங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையும் கம்பஹா  நெதும்கமுவ பகுதியை சேர்ந்த பியுமிரான் பிரசாந்தி பெரேரா  எனும் 24 வயதுடைய யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த யுவதி தனது வீட்டில் மரண வீடொன்றிற்கு செல்வதாகக்கூறி தனது வீட்டிலிருந்து வந்ததாகவும்  கம்பஹா கூட்டுறவு சங்கத்தில் இலிகிதராக கடைமையாற்றிய குறித்த யுவதியும் அதே கூட்டுறவு சங்கத்தில் பரிசோதகராக கடமையாற்றிய இரு பிள்ளைகளின் தந்தையும்  பயணித்த காரே நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும் குறித்த யுவதி காரை செலுத்திச்சென்ற பேதே விபத்து சம்பவித்துள்ளதுடன்  ஆற்றின் முப்பது அடி ஆழத்தில் சுழியில் சிக்குண்டிருந்த காரை பிரதேச இளைஞர்களும் பொது மக்களும் இணைந்து காரினுள்ளிருந்த பெண்ணிண் சடலத்தை முதலில் மீட்டெடுத்ததுடன் கடும் சேதமாகியிருந்த காரையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலங்களை பிரேத பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் உணர்வுபூர்வமாக முன்வந்து விரைந்து செயற்பட்ட பிரதேச இளைஞர்களுக்கும் பொதுமக்களும் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரி மஹிந்த தசநாயக்க நன்றியையும் தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு நீர்த்தேக்கத்திற்குள் கார் வீழ்ந்து விபத்து ; இருவர் பலி