அரசாங்கத்தில் சட்டரீதியாக பாரிய மாற்றமொன்று ஏற்படுத்தப்படும். அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோமென அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பு நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கத்தில் சட்டரீதியாக பாரிய மாற்றமொன்று ஏற்படும். அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்.

பிரதமரை மாற்றுவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்றுள்ளோம். சட்டமா அதிபர் திணைக்களமும் பல காரணங்களை தெரிவித்துள்ளது. அதனை வெளியில் சொல்ல முடியாது.

பிரதமரை மாற்றுவது குறித்து அரசாங்கத்திலுள்ள ஏனையோரிடமும் தெரிவித்தோம். ஆனால் பிரதமரை மாற்றுவதற்கு அங்குள்ள சிலர் விரும்பவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு எந்தக் கட்சிகளுக்கும் தாவப்போவதில்லை. நாம் எல்லோரும் ஒரே அணியாக இறுதிவரை ஜனாதிபதியுடன் கைகோர்த்திருந்து எமது கட்சியை பலப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.