எதிர்வரும் குளிர்காலத்தில் சைனஸ் தொல்லைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வாமையின் காரணமாகத்தான் சைனஸ் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

நாம் பயணிக்கும் போதோ அல்லது பணியாற்றும் போதோ எங்கு இருந்தாலும் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுகளை வடிகட்டி, தூண்மையான காற்றைத் தொண்டை மற்றும் மூச்சு குழல் வழியாக நுரையீரலுக்கு அனுப்பும் பணியை மூக்கில் அமையப்பெற்றுள்ள 8 நுண்ணறைகள் தான் மேற்கொள்கின்றன. இந்த நுண்ணறைகள் பாதிக்கப்படும் போது தான் சைனஸ் தொல்லை ஏற்படுகிறது. பலருக்கு உணவாலும், உணவின் வாசத்தாலும், மலர்களின் வாசத்தாலும், உணவுப் பொருள்களாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு பணியாற்றும் இடத்திலுள்ள காற்றின் சுழற்சியில் உள்ள சமச்சீரற்றத்தன்மையின் காரணமாகவும் சைனஸ் பாதிப்பிற்கு ஆளாகலாம்.

மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல்,அடிக்கடி சளிப் பிடிப்பது போன்றவை இதன் அறிகுறிகள். தலைவலி, மயக்கம், இருமல் ஆகியவை தொடரும் போது இவை ஆஸ்துமாவாகவும் மாறிவிடக்கூடிய அபாயம் உண்டு. இதனால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் மேற்கொள்வது நல்லது. அதேபோல் பயணத்தின் போது மூக்கில் துணியைக் கட்டிக் கொண்டு இதற்கு நிவாரணம் தேடலாம். காய்ச்சி வெதுவெதுப்பான நீரை பருகலாம். உணவு வகைகளையும் சூடாகவே சாப்பிடலாம். இவையெல்லாம் சைனஸைக் கட்டுப்படுத்துவதற்கான நிவாரணங்கள் தான். சரியான சிகிச்சையை மருத்துவர்களை சந்தித்து , ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருள்கள், வாசம், பணியிட சூழல் ஆகியவற்றை மாற்றிக் கொள்வதும் சரியான சிகிச்சைகள் தான்.

டொக்டர் பாலாஜி

தொகுப்பு அனுஷா.