லூதியானா நகரில் நேற்று (16) நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அதியுயர் வலு மின் வினியோகக் கம்பியை தவறுதலாகப் பிடித்த நால்வர் பரிதாபகரமாக பலியாகினர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மது அருந்தியிருந்தனர். அவர்களில் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்துவதற்காகச் சென்றிருந்தார்.

‘பெல்கனி’யில் அமைந்திருந்த கழிவறைக்கு அருகே அதியுயர் மின் வினியோகக் கம்பி பொருத்தப்பட்டிருந்தது. தடுப்புச் சுவரும் உயரம் குறைவாக இருந்தது.

இந்த நிலையில், மது அருந்தியிருந்த அந்த நபர் நிலை தடுமாறினார். விழுந்து விடாமல் இருப்பதற்காகக் கையை நீட்டிய அவர், குறித்த மின் கம்பியை தவறுதலாகப் பிடித்தார். அதில் மின்சாரம் பாய்ந்து அலறத் தொடங்கினார்.

அவரது கூக்குரல் கேட்டு ஓடி வந்த மற்றைய மூவரும் அவசரத்தில் அவரைக் காப்பாற்ற எண்ணி அவரைப் பிடித்தனர். அவர்களையும் மின்சாரம் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே நால்வரும் பலியாகினர்.

நால்வரில் ஒருவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்றும் அவரது மகளது பிறந்த தினக் கொண்டாட்டமே நடைபெற்றுக்கொண்டிருந்தது என்று தெரியவருகிறது.