ஆறு வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திக் கொன்று வீசிய இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நான்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் லாகூரின் தென்பகுதி நகரான கஸூரில், ஸைனப் அன்ஸாரி என்ற ஆறு வயதுச் சிறுமி கடந்த ஜனவரி 4ஆம் திகதி காணாமல் போனார்.

மறுதினம் அவரது உடல் குப்பைக் கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

வைத்திய பரிசோதனையில், அச்சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், இம்ரான் அலி (24) என்ற இளைஞரே இந்தக் கொலையைச் செய்ததாகச் சந்தேகம் எழுந்தது. சாட்சிகளும் இதை உறுதிப்படுத்தவே இம்ரான் அலியைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

ஏற்கனவே அப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு வல்லுறவுக் கொலைச் சம்பவங்களுக்கும் இம்ரான் அலியே காரணகர்த்தா என்று தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் இருவர் மரணமாகினர்.

இந்த நிலையிலேயே அவர் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குழந்தையைக் கடத்தியது, வல்லுறவுக்கு உட்படுத்தியது மற்றும் கொலை செய்தது உள்ளிட்ட குற்றங்களின் பேரில் இம்ரான் அலிக்கு நான்கு மரண தண்டனைகள் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.