சுற்றுலாத்துறையையும், கேரளாவையும் வேறுபடுத்திப் பார்ப்பதென்பது மிகவும் கடினமானதொன்றுதான். கேரளாவில் அலையாய் குவியும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் பகுதிகளில் குமரகமும் ஒன்றாகின்றது. அப்பகுதியில் படகு வீடுகள், பறவைகள் சரணாலயம், நீர் சறுக்கல்கள், கடற்கரை விடுதிகள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் விடயங்கள் பலவுள்ளன. இவற்றுக்கு அப்பால் அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கும் தனித்துவமான விடயமொன்று உள்ளது.
ஆம், குமரகத்தின் வடக்கு பகுதியில் அமைதியான அழகிய இயற்கை மரங்கள் நிறைந்த பகுதியொன்றின் மத்தியில் சிறியதொரு கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது வளைகுடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்காட்சியகம் (bay island driftwood museum).
பாரத மண்ணில் அருங்காட்சியகங்களுக்கு பொதுவாக பஞ்சமில்லை. பலவகை ஓவியங்கள், புராதன பொருட்கள், கலாசார விடயங்கள், வெவ்வேறுபட்ட பல விடயங்களுக்காக ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆயிரத்திற்கும் அதிகமான அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றமையை அனைவரும் அறிந்திருக்கின்றோம்.
ஆனால் இந்த வளைகுடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்காட்சியகம் என்ற ஆச்சரியமான பெயர்ப்பலகையுடன் லோரின் பேக்கர் (கேரளாவின் புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர்) முறையிலான கட்டடத்தினுள் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகத்தில் அப்படி என்ன வித்தியாசமான விடயம் உள்ளது என்ற கேள்வி சாதாரணமாக எனக்குள்ளும் எழுந்தது.
அதன் விளைவாக அந்த அருங்காட்சியகத்தினுள் பிரவேசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டு உள்நுழைந்தபோது, அமைதியான கட்டடத்தின் வாயிலருகே அமர்ந்திருந்தார் முதுமையான பெண்மணியொருவர். புன்னகையுடனான வரவேற்பினை அடுத்து பரஸ்பர அறிமுகங்களுக்கு பின்னர் இந்த அருங்காட்சியகம் சம்பந்தமான ஆச்சரியமான தகவல்களையும், அங்குள்ள பொருட்கள் தொடர்பான விளக்கங்களையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை வருமாறு,
கேள்வி:- உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
பதில்:- எனது பெயர் திருமதி.ராஜி பொன்னூஸ். நான் ஒரு ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியராவேன். என்னுடைய கணவர் பி.பி.சிரியன். இந்திய கப்பற்துறை அமைச்சில் சிரேஷ்ட பொறியியலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இந்த அருங்காட்சியகத்தினை நடத்துவதில் முழுநேரமாக ஈடுபட்டுள்ளேன்.
கேள்வி:- இந்த அருங்காட்சியகத்தில் காணப்படுகின்ற தனித்துவம் என்ன?
பதில்:- இந்த அருங்காட்சியகமே இந்தியாவில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரேயொரு வளைகுடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்காட்சியகமாகவுள்ளது. இதனை இந்திய பதிவேட்டிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.
இங்குள்ள மரங்கள், அவற்றின் சிதைவுகள், மரப்பட்டைகள் இப்படியானவை பல்லாண்டுகளாக கடல் நீரினுள் இருந்து அவை ஒவ்வொரு வடிவத்தினைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை கடல் நீரில் பல ஆண்டுகளாக காணப்பட்டமையினால் இரும்புக்கு நிகரான பாரத்தினையும் கொண்டிருக்கின்றன.
கேள்வி:- இப்படியான பொருட்களை சேகரிக்கும் சிந்தனை உங்களுக்குள் எப்படி தோற்றம் பெற்றது?
பதில்:- உண்மையில், இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எனது கணவரின் பணி நிமித்தமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. அங்கு நான் பாடசாலை ஆசிரியையாக கடமையாற்ற ஆரம்பித்தேன். எனது கணவர் பணிக்கு சென்று விடுவார். நான் பாடசாலையில் இருந்து திரும்பியதும் எனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள கடற்கரைகளுக்குச் செல்வேன்.
அவ்வாறு சென்றபோது ஒருநாள் குழந்தைகள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த போது முதற்தடவையாக கடலலையில் மரக்கிளையொன்று கரைக்கு வந்து சேர்ந்தது. அதனை நான் எடுத்துப்பார்த்தேன். மிகவும் பாரமாக இருந்ததோடு குரங்கு போன்று அந்த மரக்கிளையின் வடிவம் இருந்தது. அதனை முதன்முதலாக நான் அங்கு தங்கியிருந்த வீட்டுக்கு எடுத்துச் சென்றேன்.
அதன் பின்னர் கணவருடன் இது பற்றி கலந்துரையாடிவிட்டு உலகத்தில் இத்தகைய பொருட்கள் எப்படி கடலில் இருந்து கிடைக்கின்றன என்பது தொடர்பில் ஆராய்ந்தேன். அப்போது தான் மரங்கள், மரங்களின் சிதைவுகள், கிளைகள், மரப்பட்டைகள் கடலில் நெடுங்காலமாக இருந்து ஒரு கட்டத்தில் கரையொதுங்கும் போது இத்தகைய வடிவங்களை பெறுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். அவற்றை தேடுவதற்கு ஆரம்பித்தேன்.
கேள்வி:- அத்தகைய பொருட்களை கடலில் தேடுவதற்கு விசேடமாக எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருந்தீர்கள்?
பதில்:- நான் பெரும்பாலும் அந்தமான் நிக்கோபார் வளைகுடாவில் உள்ள வண்டுர், மேபெண்டர், மச்சிதேரா, பஞ்சாடி உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்வேன். அங்கு அடிக்கடி பேரலைகள் எழுவதுண்டு. அவ்வாறு எழுகின்ற சந்தர்ப்பங்களில் இத்தகைய பொருட்கள் வெளிவர ஆரம்பித்தன. பேரலைகள் எழுந்தவுடன் அவசர அவசரமாக சென்று இத்தகைய பொருட்களை பெற்றுக்கொள்ள முயல்வேன். பல சமயங்களில் ஏமாற்றத்துடன் திரும்பியதுமுண்டு. இவ்வாறு ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக சேகரித்த பெருட்கள் தான் இங்கு காட்சிப்படுத்தியுள்ளேன்.
கேள்வி:- எவ்வாறு இந்த அருங்காட்சியகத்தினை ஆரம்பித்தீர்கள்?
பதில்:- எனது கணவர் ஓய்வு பெற்றதும் நானும் சற்றுக்காலத்தில் ஓய்வினை பெற்றுவிட்டேன். அதன் பின்னர் நாங்கள் 2001ஆம் ஆண்டு மீண்டும் எமது சொந்த இடமான குமரகத்திற்கு திரும்பினோம். கடினமான பல நிலைமைகளில் சேகரித்த இப்பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிட்டேன். என்னிடத்தில் இருந்த பணத்தினை பயன்படுத்தி இந்தக் கட்டடத்தினை கட்டினேன். அதன் பின்னர் அப்பொருட்களை காட்சிப்படுத்தினேன்.
துறைசார்ந்த நிபுணத்துவத்துடன் நூதனமான காட்சிப்படுத்தலாக அமையாது விட்டாலும் என்னால் இயலுமானவரை காட்சிப்படுத்துவதற்கு முயன்றிருக்கின்றேன். முழுநேரமாக இந்த அருங்காட்சியகத்திலேயே செயற்பட்டு வருகின்றேன். இதனை பார்வையிடுவதற்கு சிறிய தொகையொன்றையே அறவிட்டு வருகின்றேன். அதனை சேகரித்தே முறையான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு வருகின்றேன்.
கேள்வி:- இந்த அருங்காட்சியகம் தொடர் பில் உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
பதில்:- எனக்கு இப்போது 67வயதாகின்றது. இந்த அருங்காட்சியகத்தினை ஆரம்பித்த பின்னர் இந்திய பதிவேட்டில் அது பதிவாகியுள்ளது. இந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு மிகவும் புதுமையான சுற்றுலா மையம் என்ற விருது கேரள அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு பல ஆராய்ச்சியாளர்கள் வருகின்றார்கள். சிலர் அனுமதியுடன் சில ஆய்வுகளையும் நடத்துகின்றார்கள். பலர் இந்த பொருட்களை விலைகொடுத்து வாங்குவதற்கே விரும்புகின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த அருங்காட்சியகம் நிரந்தரமாக தொடரப்படவேண்டும்.
இதனை எதிர்கால சந்ததியினரும் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் கின்னஸ் புத்தகத்தில் அருங்காட்சி யகம் பதிவு செய்யப்பட வேண்டும். அதுவே எனது பாரிய அவா! அந்த ஆவல் நிறைவேறும் பட்சத்தில் எனது முன்று தசாப்த உழைப்புக்கு வெற்றி கிடைத்ததாக நிறைவு கொள்வேன்.
இத்துடன் அவருடனான சம்பாஷணை நிறைவுக்கு வந்தது. அதன் பின்னர் அருங்காட்சியகத்தினை அவரு டைய விளக்க உரைகளுடன் பார்வையிட முடிந்தது. அங்கு, யேசுபிரான்,புட்பக விமானத்தில் சீதை, மீனினங்கள், பறவைகள், முதலை, பாம்பு, சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ்சந்திரபோஸ், மாற்றுத்திறனாளிக் குடும்பம், தாயும் சேயும் என பல்வேறு பட்ட வடிவங்களை காண முடிந்தது.
அப்பொருட்கள் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படுத்தப் பட்டிருக்காததோடு நிறப்பூச்சுக்களுமின்றி இயற்கையான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. வித்தியாசமான அனுபவத்துடன் தனித்துவத்தினையும் கொண்டிருக்கும் வளைகுடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்காட்சியகம் ஆசியாவின் பொக்கிஷமே.
( கேரளாவிலிருந்து ஆர்.ராம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM