இன, மதங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி மக்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் வைப்பதும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் தெய்வசிலைகள் உடைக்கப்படும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியிலிருந்தபோது சிறுபான்மை மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இஸ்லாமிய மதஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. தம்புள்ளை பள்ளிவாசல் முதல் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இந்தக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு இந்து மதஸ்தலங்கள் மற்றும் கிறிஸ்தவ மதஸ்தலங்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன. தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினரின் துணையுடன் அங்கு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு மதங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் அன்று இடம்பெற்றன. மதங்களுக்கிடையே உருவாகும் முறுகல் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக உருவாகியிருந்தன.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மதஸ்தலங்கள் மீதான திட்டமிட்டவகையிலான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனாலும் இந்த அரசாங்க காலத்திலும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது சில இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை நிறுவும் முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்று வருகின்றன.
வடக்கு, கிழக்கில் மத பிரிவினர்களுக்கிடையேயும் முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளமையினால் அங்கு பல இடங்களில் வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் திருவுருவச்சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்டுள்ளன. இதனால் மதப்பிரிவினருக்கிடையே முறுகல் நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் கடந்த 12ஆம் திகதி இரவு மூன்று இந்துக்களின் வணக்கஸ்தலங்கள் உடைக்கப்பட்டு திருவுருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்டும் உள்ளன. தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தின் மூலமூர்த்தியான சிவனின் திருவுருவச்சிலை உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. தள்ளாடி திருக்கேதீஸ்வரம் வீதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் விக்கிரகமும் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. அதேபோன்று தாழ்வுப்பாடுவீதி கீரி சந்தியிலுள்ள ஆலமரத்தின் கீழ் காணப்படுகின்ற விநாயகர் விக்கிரகமும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி தினமான 13ஆம் திகதிக்கு முதல் நாளான 12 ஆம்திகதி இரவே இந்த மூன்று ஆலயங்களிலும் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மதப்பிரிவினர்களுக்கிடையே முரண்பாடான நிலைமை நீடித்தே வருகின்றது. அங்கு கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதர மதப்பிரிவினருக்கிடையே முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இதன் ஒருகட்டமாகவே இந்து ஆலயங்களிலுள்ள விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.
இதற்கு முன்னரும் மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருவுருவச்சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன. இதேபோன்றே இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. தற்போது சிவராத்திரிக்கு முதல்நாள் இத்தகைய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை இந்து மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த சம்பவங்களை கண்டித்து இந்து மக்கள் சார்பில் புதன்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டதுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றதுடன் அரசாங்க அதிபரிடமும் மன்னார் பிரதேச செயலாளரிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் மீதான அடாவடித்தனம் தொடரும் பட்சத்தில் அது இனமத முறுகலை உருவாக்கி சகவாழ்வு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்த ஆவன செய்யவேண்டுமென்று இந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் யாவும் திட்டமிட்டு புரியப்பட்டதுபோல் ஒரே இரவில் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் மன்னார் வாழ் இந்து மக்களின் மனதை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மகா சிவராத்திரி கொண்டாடப்படும் புனித நாளில் இடம்பெற்ற அநாகரிகமான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது. இங்கு அனைத்து மதப்பிரிவினரும் இனமத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் கடந்த சில காலங்களாக இந்து ஆலயங்களும் விக்கிரகங்களும் உடைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்து மக்களுக்கும் ஏனைய சகோதர மதத்தவர்களுக்குமிடையில் ஒரு கசப்பான உறவு ஏற்பட்டு வருகின்றது. இந்துக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களது சுமுக வழிபாடுகளுக்கு இடையூறு செய்வது எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடு அல்ல என்றும் இந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவங்களை அகில இலங்கை இந்துமாமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. கடந்த காலங்களில் இந்து ஆலயங்கள் மற்றும் தெய்வ விக்கிரகங்கள் மீதுதொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் இந் நாட்டில் வாழும் இந்து மக்களைமிகவும் வேதனைகொள்ளச் செய்துள்ளன.
இந்துக்கள் மிகப்புனிதமான சிவராத்திரி விரதத்தை திருக்கேதீச்சர ஆலயத்தில் கடந்த செவ்வாய் அனுட்டித்துக் கொண்டிருக்கும்போதுமன்னாரிலேயே அமைந்துள்ள மூன்று இந்துஆலயங்களின் தெய்வவிக்கிரகங்களை விஷமிகள் திட்டமிட்டு சேதப்படுத்தியுள்ள செயலானது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தெய்வ விக்கிரகங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டமனிதத்தன்மையற்றதிட்டமிட்டசேதப்படுத்தலானது மன்னார் மாவட்டத்தில் வாழும் இந்துக்களையும் இலங்கைவாழ் இந்துக்களையும் மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று இந்து மாமன்றம் விசனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ இந்த தாக்குதல் சம்பவங்களை கண்டித்திருக்கின்றார். மன்னாரில் இந்து ஆலயங்களில் சிலைகள் உடைக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இன்று ஒரு மதத்திற்கு நடைபெறும் இச்செயல் நாளை இன்னொரு மதத்திற்கு நடைபெற வாய்ப்பாக அமையும். ஆகவே நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இத்தகைய சம்பவங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மதத்தலைவர்கள் மாத்திரமல்ல மதங்களை சார்ந்த ஒவ்வொருவரும் ஒன்றாக செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் நாம் வெற்றியைக் காண முடியும் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் கருத்து தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே இந்து ஆலயங்களில் திருவுருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டமையை மன்னார் மறை மாவட்ட ஆயர் கண்டித்துள்ளமை வரவேற்கத்தக்க செயலாகும். மதத் தலைவர்களிடையே இவ்வாறான புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலவுமானால் இத்தகைய மத முரண்பாடுகளை தவிர்க்கக்கூடிய நிலைமை ஏற்படும். மன்னாரில் இந்து ஆலயங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முன்வரவேண்டும்.
எதிர்காலத்தில் மன்னாரில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் மதத்தலைவர்களும் மதஸ்தாபனங்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மத பிரிவினர் களுக்கிடையே ஏதாவது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தால் அந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கென சமாதானக்குழுக்களை அமைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதே பயனுள்ள நடவடிக்கையாக அமையும். மன்னார் மாவட்டத்தில் இனியும் எந்தவொரு மதஸ்தலம் மீதும் தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM