மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி விளக்கமளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன் நிறைவுபெறுகிறது.

இலங்கைப் பிரஜை அல்லாத அர்ஜுன மகேந்திரன் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகத் தெரியவருகிறது. 

மத்திய வங்கி பிணைமுறி ஊழலில், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோஷியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன மற்றும் அர்ஜுன் அலோஷியஸின் மாமனாரும் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரை சந்தேக நபர்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடந்த இரண்டாம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

அதன்பேரில், சுதந்திர தினமான பெப்ரவரி நான்காம் திகதி அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் அர்ஜுன மகேந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி விளக்கமளிக்க இன்று 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இதுவரை அர்ஜுன மகேந்திரன் தரப்பு மௌனமாகவே இருந்து வருகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், அர்ஜுன மகேந்திரனை வரவழைப்பதற்கான எந்த முயற்சியையும் அரசு செய்யாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.