நுரைச்சோலை, கரம்ப பகுதியில் உள்ள வீடொன்றில், எதுவித ஆவணங்களும் இல்லாமல், சட்டவிரோதமாக கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியர் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 29, 48 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

முப்பத்தொரு பொதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 688 கிலோ எடையுடைய இந்தக் கடலட்டைகளின் மதிப்பு சுமார் இரண்டரைக் கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

அத்துடன், 21 பொதிகளில், உலர வைத்த சுறா மீன் செட்டைகள் 625 கிலோகிராமும் இதுவரையில் இலங்கைக்கு அறிமுகமில்லாத சில வகை கடல் உயிரினங்கள் 10 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதான மூவரும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.