19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவுடன் மோத மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. 

இத்தொடரை நடாத்திவரும் பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்தே, இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெற்றது.

மிர்புரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மெஹேடி ஹசன் மிராஸ் 60 (74), மொஹமட் சாய்புடின் 36 (55)ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கீமோ போல் 3, ஷமர் ஸ்பிறிங்கர் 2, சேமர் கே.ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 227 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 48.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் ஷமர் ஸ்பிறிங்கர் ஆட்டமிழக்காமல் 62 (88), ஷிம்ரொன் ஹெட்மையர் 60 (59), கிட்ரோன் போப் 38 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சாலே அஹ்மட் ஷவோன் 3, மொஹமட் சாய்புடின் 2, மெஹேடி ஹஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 இப்போட்டியின் நாயகனாக, ஷமர் ஸ்பிறிங்கர் தெரிவானார்..