மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என, இந்திய அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்ச உறுதியான முறையில் முதன்மை பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும்” என, சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

தனது ட்வீட்டில், சீனாவுடனான மஹிந்தவின் நெருங்கிய உறவைச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், “வெளிநாட்டு உறவில் எவ்வாறு இயங்க வேண்டும் என்று இந்தியா தெரிந்துகொள்ள வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் எதுவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டதோ அல்லது உங்களுக்குப் பிடித்தவாறு அமையவேண்டும் என்பதோ இல்லை. அதை எமக்குத் தேவையான மாதிரி மாற்றிக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு அடிக்கடி வருகை தந்தவர் சுப்ரமணியன் சுவாமி என்பதுடன், அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சுமுகமான உறவு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.