நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்று தோட்டம் மாக்கஸ் கீழ்பிரிவில் 1973ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் தொழிற்சாலையில் உள்ள களஞ்சியசாலை பகுதியில் தீ பரவி அதிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தொழிற்சாலைக்கு அருகில் தோட்டத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையமும் மின்சாரம் வழங்கும் பகுதியும் காணப்படுகிறது. ஆனால் இந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு சேதங்கள் ஏற்படவில்லை.

அதேவேளையில் சுமார் 45 வருடகாலமாக மூடப்பட்டிருக்கும் இந்த தொழிற்சாலையின் பகுதியில் களஞ்சியசாலை ஒன்று மாத்திரம் இயங்கி வந்துள்ளது.

இந்த களஞ்சியசாலையில் தும்பு மெத்தைகள் மற்றும் இரும்பு பொருட்கள் மாத்திரம் காணப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான் முதலில் தீப்பரவியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை அறிந்த நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாக்கஸ் தோட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த தீ சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.