(ப.பன்னீர்செல்வம், ஆர். ராம்)

தங்கமொன்றின் விலையே ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமாக அமைய வேண்டுமெனக் கோரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 

சம்பளச் சபைகள் கடட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கு விதியை அங்கீகரிக்கும் பிரேரணை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை சபையில் நடைபெற்றது. 

இதன் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கின்ற போதும் தனியார் மற்றும் மலையக தேசிய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அத்தகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. 

தற்போது அத்தரப்பினருக்கு உட்பட்ட வகையில் உரிய கொடுப்பனவு கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. 500 ரூபா கொடுப்பனவில் அவர்களிகன் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமைக்குள் தினமும் முகம் கொடுத்து வருகின்றனர். 

நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அவர்கள் வாழ்வதற்கான வீடுகள் காணிகள் கூட இல்லாது பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். 

இந்நாட்டில் பட்டதாரிகள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் நான்கு ஆண்டுகள் கற்கைகளை நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்புக்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதுடன் மேலும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 

தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்க வேண்டும்.