"முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் சிறந்ததொரு படிப்பினையினை மக்களிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளோம். மக்களின் இந்த மாற்றத்தினை கருத்தில் கொண்டு மீண்டும் ஜனநாயக பாதையினை பலப்படுத்தி உறுதியாக மீண்டெழுவோம்" என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

"ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தி அந்த மாற்றத்தில் மக்கள் திருப்தியடைந்த போதிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மோசமான அரசியல் நகர்வுகள் மற்றும் கடந்த கால குற்றங்களை மறைக்கும் செயற்பாடுகள் என்பன மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்துவிட்டது.

அதற்கான மக்களின் பிரதிபலிப்பே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாற்றமாகும். 

மக்களின் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் அரசாங்கமாக நாம் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் பாதையில் பலமாக முன்னோக்கி நகர்வோம். அதற்காக நடவடிக்கைகள் உடனடியாக  கையாள்வோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் நிலைபாட்டினை கொண்டு அரசாங்கத்தை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டிய தேவையும் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் இடம்பெறும்" என தெரிவித்தார்.