இந்தியாவின் கோவா மாநிலத்தில் தாயார் மற்றும் சகோதரனால் 20 ஆண்டுகள் தனி அறையில் சிறை வைக்கப்பட்ட 45 வயது பெண்ணை கோவா பொலிஸார் மீட்டள்ளனர்.

குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின்  அடிப்படையிலையே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போதிய உணவின்றி, மிகவும் சோர்வுடன், நோய்க்கூறுடன் காணப்பட்ட குறித்த பெண் தற்போது வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள மபூசா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

தனது பி.ஏ. பட்டப்படிப்பை தொடர முற்பட்டபோது தாய் மற்றும் சகோதரனால் தனி அறையில் குறித்த பெண் அடைத்து வைக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக போர்வை, படுக்கை இன்றி சீமேந்து தரையில் குறித்த பெண் படுத்து உறங்கியுள்ளார்.

பொலிஸார் குறித்த பெண்ணை மீட்க அறைக்குள் நுழையும் போது அந்தப் பெண் உடலில் துணியில்லாமல் இருந்துள்ளார்.மேலும் அறையை விட்டு வெளியே வரவும் பிடிவாதம் பிடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒருவரை குறித்த பெண் திருமணம் செய்து கொண்டார் என்றும், ஆனால் அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது தெரிந்த பிறகு  மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று நடந்து கொண்டார் என்றும் இதனையடுத்தே குறித்த பெண்ணை தனி அறையில் அடைத்தனர் என்றும் பெண் குறித்து உறவினர் ஒருவர் மாறுபட்ட கருத்தை ஊடகங்களுக்கு பதிவு செய்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் கோவா பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.