நடைபெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் தலைவர்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வீரகெட்டிய, மெதமுலான தொகுதியில் உள்ள டி.ஏ.ராஜபக்ச வித்தியாலயத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பாரியார் ஷிரானி ராஜபக்ச மற்றும் சிரேஷ்ட புதல்வர் நாமல் ராஜபக்ச ஆகியோருடன், ஆதரவாளர்கள் சகிதம் சென்று தமது வாக்கைப் பதிவு செய்தார்.

இதேபோல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நிட்டம்புவ, ஷேத்ராராம விஹாரையில் தமது வாக்கைப் பதிவு செய்தார்.

திருகோணமலை சென்மேரிஸ் மகளிர் வித்தியாலயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தன் வாக்களித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

தனது வாக்கை செலுத்திய பின்னர் பிரதமர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சி அறிமுகப் படுத்திய புதிய தேர்தல் முறையினாலேயே இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை சுமுகமாக நடாத்த முடிந்தது. மேலும் தேர்தலை சுமுகமாக நடாத்த பணி புரிந்த தேர்தல்கள் ஆணையகத்திற்கும் அனைத்து அரச ஊழியர்கள் மற்றம் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 2018