நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேசசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அரசாங்க அதிபர் ரூபாவாதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நான்கு பிரதேச சபைகளில் 41 வட்டாரங்களுக்கான 134 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த 134 வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் அந்த வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகஸ்தர்கர்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அதனோடு இணைந்த அனைத்து பொருட்களையும் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலைமுதல் இடம்பெற்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 41 வட்டாரங்களுக்கான வாக்கெண்ணும் நிலையங்களாக 70 வாக்கெண்ணும் நிலையங்களும், 41 பெறுபேறுகளை அறிவிக்கும் நிலையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை தேர்தல்கடமைகளில் ஈடுபடுவதற்காக அனைத்து ஆளணியினரும் பூர்த்தி செய்யப்பட்டு அந்தந்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு கடமைகளுக்காக மேலதிக பொலிசாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு நாளையதினம் தேர்தல்கள் சுமுகமான முறையில் இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதேவேளை நாளைய உள்ளுராட்சி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 72961 பேர் வாக்களிப்பதற்கு தகுதிவுபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.