சீனாவில் குற்றவாளிகளை பார்த்த உடன் கண்டுபிடிக்க பொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே சீனாவில்தான் அதிக கமராக்கள் இருக்கிறது. சீனாவில் திரும்பும் திசையெல்லாம் சி.சி.டி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இதுவரை சுமார் 17 கோடி கமராக்கள் அங்குப் பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் நடக்கும் எந்த ஒரு நபரின் அடையாளத்தையும் இதன் மூலம் ஒரே நொடியில் கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறப்படுகிறது. 

தற்போது அங்கு இருக்கும் கமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் மேற்கொண்டு 40 கோடி கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் சீனாவில் எந்த இடத்தில் யார்? இருக்கிறார்கள் என ஒரு நொடியில் கண்டுபிடிக்க முடியும்.

இந் நிலையில் அங்குத் திருடர்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக மூக்குக்கண்ணாடி பயன்படுத்தப்பட உள்ளது.

மூக்குக்கண்ணாடி ஒன்றின் மூலம் திருடர்களை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இக் கண்ணாடிகள் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து யாரையாவது பார்ப்பதன் மூலம் அவர்கள் குற்றவாளிகளா? இல்லையா? என கண்டுபிடிக்கலாம்.

இக் கண்ணாடியில் கமராவுடன் ஸ்கேன் செய்யும் அமைப்பும் இருக்கும். இது எதிரே வருபவர்களை ஸ்கேன் செய்தவுடன் பொலிஸாரிடம் இருக்கும் தகவலை வைத்து அந்த நபர் குற்றவாளியா? என்பதை கண்டறியும்.

தற்போது இந்த தொழில்நுட்பத்தை மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த தொழில்நுட்பம் மூலம் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த மூக்குக்கண்ணாடி மிகவும் நன்றாக இயங்கி வருகிறது எனவும், இது சீனாவில் புதிய பாதுகாப்பை உருவாக்கும் எனவும் இதை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.