இந்தியாவில், போலி வைத்தியர் ஒருவர் சுத்தப்படுத்தப்படாத ஊசி மூலம் சிகிச்சை அளித்ததில் 33 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம், பெங்கார்முவைச் சேர்ந்தவர் ராஜேந்திர யாதவ். இவர், தன்னைத் தானாகவே மருத்துவர் என்று அறிவித்துக்கொண்டு, அக்கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளார்.

கிராமத்தில் வீடுகள் தோறும் செல்லும் இவர், அங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் எதையெதையோ செய்து வந்திருக்கிறார்.

மிகக் குறைந்த செலவில் ‘சிகிச்சை’ அளித்து வந்ததால் மக்களும் அவரை நம்பி தமது உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், குறுகிய காலத்தில் பெங்கார்முவில் இருந்து எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானித்த மாவட்ட சுகாதார நிலையத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, முறையாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசிகளைக் கொண்டு மக்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் யாதவ் மருந்து ஏற்றி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த யாதவ்வின் இந்தச் செயலால், அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்ட சுமார் ஐயாயிரம் பேர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.