தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் பணிக்கு வராத பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊழியர்களை தேர்தல் பணிகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கும் அரச நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

இது குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள தேர்தலில் சில அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் காட்டி பணிக்குச் சமுகமளிக்காதிருக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தேர்தல் பணிகளுக்காக வாகனங்களை அனுப்பாமல் வைத்திருக்க சில அரச நிறுவனங்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள் எவ்வித காரணமும் கூறாமல் தமது கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தேர்தல் பணிகளுக்காக கையளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கடமைகளுக்கு சமுகமளிக்காத பட்சத்தில் ஒரு இலட்ச ரூபா அபராதமோ, மூன்றாண்டு சிறைத் தண்டனையோ அல்லது இவ்விரு தண்டனைகளுமோ விதிக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.