இலங்கைக் கால்­பந்து தேசிய அணிக்கு மொஹமட் நிசாம் பக்கீர் அலி புதிய தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இலங்கைக் கால்­பந்து சம்­மே­ள­னத்­துடன் இரண்டு வரு­ட­கால ஒப்­பந்­தத்தை மேற்­கொண்டே மொஹமட் நிசாம் பக்கீர் அலி இலங்கை கால்­பந்து அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் பத­வியை ஏற்­றுள்ளார்.

தற்­போ­துள்ள நிலையில் இலங்­கைக்­கென்­றொரு தேசிய கால்­பந்­தாட்ட அணி இல்லை. அத்­தோடு தேசிய அணியின் பயிற்­சி­யா­ள­ரா­க­ இருந்த ஸ்டன்வெல் கடந்த வருடம் நீக்­கப்­பட்டார்.

அதி­லி­ருந்து இலங்கை அணிக்கு பயிற்­சி­யா­ளரை நிய­மிக்க இலங்கைக் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் முன்­வ­ர­வில்லை.

அத்­தோடு இலங்­கை தேசிய அணி­யையும் கலைத்­தது இலங்கைக் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம்.

இந்­நி­லையில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சாவ் கிண்ண கால்­பந்­தாட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தத் தொட­ருக்­கான இலங்கை அணியை தயார்­டுத்தும் நோக்­கி­லேயே இலங்கைக் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் புதிய பயிற்­சி­யா­ளரை வர­வ­ழைத்­துள்­ளது.

இலங்­கையின் முன்னாள் தேசிய அணி வீர­ரான நிசாம் பக்கீர் அலி மாத்­தளை ஸாஹிரா கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். 1976ஆம் ஆண்டு இலங்கை தேசிய கால்­பந்­தாட்ட அணியில் இணைந்த பக்கீர் அலி 1980 ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பை ஏற்றார்.

அதன்­பி­றகு கொழும்பு யோர்க் அணியில் விளை­யா­டி­வந்த பக்கீர் அலி பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் கால் பந்­தாட்ட அணியின் முகா­மை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

கேர­ளாவின் கால்­பந்­தாட்ட அணிக்கும் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்ட பக்கீர் அலியை இலங்கை அணியின் பயிற்­சி­யா­ள­ராக்­கி­யுள்­ள  நடவடிக்கையானது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு இலங்கையின் கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் முதல் அங்கமாக கருதப்படுகிறது.